மு.க.ஸ்டாலின் இன்று சேலம் வருகை; வருமுன் காப்போம் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்


மு.க.ஸ்டாலின் இன்று சேலம் வருகை; வருமுன் காப்போம் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 28 Sep 2021 10:45 PM GMT (Updated: 28 Sep 2021 10:45 PM GMT)

சேலத்துக்கு இன்று வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருமுன் காப்போம் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

முதல்-அமைச்சர் வருகை
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக மு.க.ஸ்டாலின் இன்று காலை 8.30 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு சேலத்துக்கு வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு அரசு அதிகாரிகள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்பு அளிக்கின்றனர்.பின்னர் அங்கிருந்து கார் மூலம் முதல்-அமைச்சர் வாழப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்கிறார். அங்கு வருமுன் காப்போம் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசுகிறார். கலெக்டர் கார்மேகம் முன்னிலையில் நடைபெறும் இந்த விழாவில் அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் கலந்து கொள்கின்றனர்.

புதிய திட்டப்பணிகள்
இதையடுத்து ஆத்தூர் செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு ரூ.2 கோடியே 84 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டிடத்தை திறந்து வைக்கிறார். மேலும் அங்கு நடைபெறும் விழாவில் மாவட்டத்தில் ரூ.76 கோடியே 48 லட்சம் மதிப்பிலான புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைப்பதுடன், முடிவுற்ற பணிகளையும் மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கிறார்.அதைத்தொடர்ந்து சேகோசர்வ் அதிகாரிகள், ஆலை உரிமையாளர்கள் மற்றும் மரவள்ளி கிழங்கு விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டத்தில் முதல்-அமைச்சர் கலந்து கொண்டு பேசுகிறார். மாலையில் கருப்பூர் சிட்கோ தொழிற்பேட்டையை மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார். பின்னர் அவர் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினருடன் கலந்துரையாடுகிறார். இந்த கூட்டத்தில் சேகோசர்வ் ஆலை உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் தேவைகளை குறித்து அவர் கேட்டறிந்து ஆலோசனை நடத்துகிறார்.

போலீஸ் பாதுகாப்பு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி சேலம் சரக டி.ஐ.ஜி. மகேஸ்வரி, மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் ஆகியோர் தலைமையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம்
இதைத்தொடர்ந்து நாளை தர்மபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். அன்று காலை 9.30 மணிக்கு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.12 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தாய், சேய் சிறப்பு சிகிச்சை பிரிவு கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். தொடர்ந்து அவர் காலை 10.30 மணிக்கு ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இதைத் தொடர்ந்து மாலை 3.30 மணிக்கு வத்தல்மலைக்கு சென்று மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். பின்னர் மாலை 5 மணிக்கு சேலம் விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி சேலம், வாழப்பாடி, ஆத்தூர் நகரங்கள் விழாக்கோலம் பூண்டு உள்ளது. முதல்-அமைச்சரை அதிர்வேட்டுகள் முழங்கவும், கிராமிய கலைநிகழ்ச்சிகளுடனும், தி.மு.க.வினர் உற்சாகமாக வரவேற்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். வருமுன் காப்போம் திட்டத்தை தொடங்கி வைக்க வரும் முதல்-அமைச்சர் மேலும் பல்வேறு அறிவிப்புகளை இந்த விழாவில் சேலம் மாவட்டத்திற்கு அறிவிப்பார் என்று தி.மு.க.வினர் மகிழ்ச்சியுடன் கூறினர்.


Next Story