மத்திய அரசின் திட்டங்களுக்கு போட்டோ ஒட்டுவதில் மாநில அரசு தீவிரம் காட்டுகிறது - அண்ணாமலை


மத்திய அரசின் திட்டங்களுக்கு போட்டோ ஒட்டுவதில் மாநில அரசு தீவிரம் காட்டுகிறது - அண்ணாமலை
x
தினத்தந்தி 29 Sep 2021 5:04 AM GMT (Updated: 29 Sep 2021 5:04 AM GMT)

மக்கள் பயன்பெறும் திட்டங்களில் 80 சதவீதம் மத்திய அரசு வழங்கும் திட்டங்கள் தான் என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா, அதிமுக  வேட்பாளர்களை ஆதரித்து பா.ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலை கீழநத்தம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டார். 

அப்போது பேசிய அவர், “மக்களுக்கான திட்டங்களில் 80% மத்திய அரசுடையதுதான். மாநில அரசுடையது அல்ல. உள்ளாட்சி தேர்தலில் ஆளும்கட்சி படை பலம், பண பலத்தை தாண்டி நல்லவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. திமுக தேர்தலுக்கு முன் சொன்னது ஒன்று தற்போது செய்வது வேறு என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஒவ்வொரு விஷயத்தையும் எதிர்த்து பேசுவது திமுகவின் வழக்கமாக உள்ளது. மத்திய அரசு திட்டத்தில் அவர்களுடைய போட்டோ ஒட்ட வேண்டும் என்பதில் இருக்கும் ஆர்வம், மத்திய அரசின் திட்டத்தை லஞ்ச லாவண்யம் இன்றி பொதுமக்களுக்கு கொண்டு சேர்ப்பதிலும் இருக்க வேண்டும். 

நாம்தான் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக ஆளுங்கட்சியினர் அதிகாரிகளை கட்டாயப்படுத்தி வேட்புமனுக்களை நிராகரிக்க நிர்ப்பந்திக்கின்றனர். 1 முதல் 8 வரை பள்ளிகள் திறப்பை பொறுத்த வரையில் அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும். மத்திய அரசின் குடிநீர் திட்டம் மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக குடிநீர் கிடைத்திட, பிரதமர் மோடி வழங்கும் திட்டங்கள் நேரடியாக கிடைத்திட, பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள்” என்று அவர் கூறினார். 

Next Story