உள்ளாட்சித் தேர்தல்: "பூத் சிலிப் இல்லாதவர்களும் வாக்களிக்கலாம்" - மாநில தேர்தல் ஆணையம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 29 Sep 2021 5:35 AM GMT (Updated: 29 Sep 2021 5:35 AM GMT)

உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது, பூத் சிலிப் இல்லாத வாக்காளர்களைத் திருப்பி அனுப்பக் கூடாது என்று அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை, 

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு உட்பட தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கு முதற்கட்டமாக பயிற்சி முகாம் நிறைவடைந்துள்ளது. வாக்குப்பதிவு அன்று பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து விவரிக்கப்பட்டு, கையேடுகள் அனைத்து அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், வாக்குப்பதிவு அன்று வாக்காளரை எளிதாக  அடையாளம் காண வழங்கப்படும் பூத் சிலிப் இல்லையென வாக்காளரை திருப்பி அனுப்பக்கூடாது என்றும், பூத் சிலிப் இல்லையென்றாலும் வாக்காளர் அட்டையை சோதித்து வாக்களிக்க அனுமதிக்கலாம் என்றும் மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், வாக்காளர் பட்டியலில்  இடம்பெற்று வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு பொது தேர்தலில் அனுமதிப்பதை போல,14 மாற்று ஆவணங்களில் ஒன்றை வைத்து வாக்களிக்க அனுமதிக்கவும் திட்டமிட்டுள்ள மாநில தேர்தல் ஆணையம், விரைவில் இதுகுறித்த சுற்றறிக்கையை வெளியிட உள்ளது.

Next Story