கோவிட் 19 பெருந்தொற்றினால் இரு மடங்காகும் மாரடைப்பு மரணங்கள்


கோவிட் 19 பெருந்தொற்றினால் இரு மடங்காகும் மாரடைப்பு மரணங்கள்
x
தினத்தந்தி 29 Sep 2021 6:08 AM GMT (Updated: 29 Sep 2021 6:08 AM GMT)

கோவிட்19 பெருந்தொற்று நம் உடலில் அழற்சியை ஏற்படுத்தி பல உறுப்புகளை பாதிக்கிறது என்பது தெரிந்ததே. இதில் குறிப்பாக நுரையீரலை இந்நோய் பெரிய அளவில் பாதிக்கிறது என்றாலும் இதயமும் இதனால் பாதிக்கப்படுகிறது என்பது பலரும் அறியாத உண்மை.

கோவிட்19 பெருந்தொற்று நம் உடலில் அழற்சியை ஏற்படுத்தி பல உறுப்புகளை பாதிக்கிறது என்பது தெரிந்ததே.  இதில் குறிப்பாக நுரையீரலை இந்நோய் பெரிய அளவில் பாதிக்கிறது என்றாலும் இதயமும் இதனால்  பாதிக்கப்படுகிறது என்பது பலரும் அறியாத உண்மை. 

இதய ரத்தக்குழாய்  நோய்களான, போதுமான ரத்த ஓட்டம்  இதயத்திற்கு கிடைக்காததால் இதயம் செயல் இழப்பது, மாரடைப்பு, இதய ரத்தக் குழாய்களுக்கு விபத்தினால் ஏற்படும் பாதிப்பு  போன்ற காரணங்களால் மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். இதய ரத்தக் குழாய் பிரச்சனைகள் பொதுவாக உடல் பருமன், ரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் உழைப்பில்லாத வாழ்க்கை முறை மற்றும் ரத்த கொழுப்பு போன்ற காரணங்களினால்  ஏற்படுகிறது. 

இதய நோய் மற்றும் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக கோவிட்19 பெருந்தொற்று அதிகளவில் உயிரிழப்பை ஏற்படுத்துவதாக 2021 மார்ச் மாத உலக சுகாதார மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது”, என்று கூறிய சென்னை ரேலா மருத்துவமனையின் இதய ரத்தக் குழாய் மற்றும் மார்பு அறுவை சிகிச்சைக்கான மூத்த மருத்துவர் டாக்டர் ஆறுமுகம் அவர்கள், கோவிட் பெருந்தொற்று, நுரையீரலுக்கு அடுத்தபடியாக இதயத்தை பாதிப்பதாக கூறுகிறார். இதைப் பற்றி அவர் மேலும் கூறியது பின்வருமாறு,

பெருந்தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து குணமாகிய நோயாளிகளில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் பேருக்கு ஏதோ ஒரு வகை இதயம் தொடர்பான பிரச்சனை ஏற்படுகிறது. இத்தொற்று நுரையீரலில் ஃபைப்ரோசிஸ்  என்ற பிரச்சினையை ஏற்படுத்துவதை போலவே இதயம் கல்லீரல் கணையம் போன்ற மற்ற உறுப்புகளையும் பாதிக்கிறது. இதயத்தை பொறுத்தவரையில் அது இதய தசைகளில் அழற்சியை ஏற்படுத்தி மயோகார்டைட்டிஸ் என்ற பிரச்சனையை உருவாக்குகிறது. இதனால் இதயத்துடிப்பில் மாற்றங்களும் மாரடைப்பும் ஏற்படலாம். ஏற்கனவே ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதயத்துடிப்பில் ஏற்றக் குறைவு உள்ளவர்கள், ஏற்கனவே இதய செயலிழப்பு உள்ளவர் போன்றோருக்கு  கோவிட் தொற்றுக்கு பிறகு இதயத்தில் ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்படுகிறது.

மாரடைப்பினால் இறப்போரின் எண்ணிக்கை இந்த பெருந்தொற்று காலத்தில் இரு மடங்காகி உள்ளது. பொதுவாக முன்பெல்லாம் நாலு பேருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் மூன்று பேர் காப்பாற்றப்படுவார்கள். ஆனால் தற்பொழுது இரண்டு பேரை மட்டுமே காப்பாற்ற முடிகிறது. எனவே கோவிட்டினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் நலமாக வீடு திரும்பினாலும் அவ்வப்பொழுது இதயநோய் வல்லுனரை பார்த்து பரிசோதனை செய்துகொள்வது அவசியம். நுரையீரலில் ஏற்படும் ஃபைப்ரோசிஸ் என்ற பிரச்சினையும் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி சில காலங்களில் மாரடைப்புக்கும் வழிவகுக்கலாம். இதயம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை முறையான பரிசோதனைகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்பதால் போதிய இடைவெளியில் இதயநோய் மருத்துவரை சந்தித்து உடல் நலத்தை பரிசோதித்துக் கொள்வது இந்த ஆபத்தை தவிர்க்க உதவும்”, என்று கூறி முடித்தார் டாக்டர் ஆறுமுகம் அவர்கள்.


Next Story