ஒகேனக்கல் கூட்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!


ஒகேனக்கல் கூட்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
x
தினத்தந்தி 30 Sep 2021 7:28 AM GMT (Updated: 30 Sep 2021 7:28 AM GMT)

மக்களுக்கு விநியோகிக்கும் குடிநீர் அளவை மேலும் உயர்த்துவது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

தர்மபுரி,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும், அரசுத் திட்டங்கள் தொடர்பான ஆய்வுப் பணியை மேற்கொள்ளவும் தர்மபுரி சென்றார். தர்மபுரி அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மைய கட்டிடம் உள்ளிட்ட புதிய கட்டிடங்களை தமிழக முதல்-அமைச்சர் இன்று திறந்து வைத்தார். பின்னர் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கலில் அமைந்துள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று நிலையம் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட கட்டமைப்புகளை ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் ஒகேனக்கல்  புறப்பட்டார்.

தர்மபுரியில் இருந்து ஒகேனக்கல் புறப்பட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பாதி வழியில் காரை நிறுத்தி, திடீரென பள்ளி மாணவிகளை சந்தித்தார். அப்போது கைதட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை உற்சாகமாக பள்ளி மாணவிகள் வரவேற்றனர். பின்னர் பள்ளியின் செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்கள், மாணவிகளிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். 

இந்நிலையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது நீரேற்று நிலையத்தில் உள்ள புகைப்படக் கண்காட்சியை முதல்-அமைச்சர் பார்வையிட்டார். பின்னர் மக்களுக்கு விநியோகிக்கும் குடிநீர் அளவை மேலும் உயர்த்துவது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். 

ரூ.1,928 கோடி மதிப்பில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி காவிரி ஆற்று நீர், நீரேற்று நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்துக்கு வினியோகம் செய்யப்படுகிறது. நீர் மாசுபாட்டால் ஏற்படும் புளோரசிஸ் நோயில் இருந்து மக்களை காக்கும் திட்டமாக இது கூறப்படுகிறது.

Next Story