உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தப்போவது இல்லை ஐகோர்ட்டில் புதுச்சேரி அரசு தகவல்


உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தப்போவது இல்லை ஐகோர்ட்டில் புதுச்சேரி அரசு தகவல்
x
தினத்தந்தி 4 Oct 2021 6:56 PM GMT (Updated: 4 Oct 2021 6:56 PM GMT)

வார்டு ஒதுக்கீட்டை மறுஆய்வு செய்ய உள்ளதால் புதுச்சேரி உள்ளாட்சி அமைப்புகளுக்கு இப்போதைக்கு தேர்தல் நடத்தப்போவது இல்லை என்று சென்னை ஐகோர்ட்டில் புதுச்சேரி அரசு தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

புதுச்சேரியில் அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு வார்டுகள் ஒதுக்கீட்டில் குளறுபடிகள் உள்ளதாக கூறி முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. பிரகேஷ்குமார் உள்பட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

எம்.எல்.ஏ. தாக்கல் செய்த மனுவில், எஸ்.சி. பிரிவு மக்கள் அதிகம் வாழும் வார்டைத்தான் எஸ்.சி. பிரிவினர் போட்டியிட ஒதுக்க வேண்டும் என்று சட்டம் உள்ளது. ஆனால் அம்மக்கள் மிகவும் குறைவாக வாழும் 4 வார்டுகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், பிற பிரிவினர் அந்த வார்டுகளில் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, உள்ளாட்சி தேர்தலை அவசரமாக நடத்த வேண்டும் என்பதற்காக சட்டத்தை மீற முடியாது என கருத்து தெரிவித்து, புதுச்சேரி அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.

தேர்தல் இல்லை

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது புதுச்சேரி அரசு தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், ‘வார்டுகள் ஒதுக்கீடு செய்தது குறித்து புதுச்சேரி அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டது. வார்டு ஒதுக்கீடு தொடர்பாக மறுஆய்வு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதனால், புதுச்சேரியில் இப்போதைக்கு உள்ளாட்சி தேர்தலை நடத்தப்போவது இல்லை. வருகிற 21-ந் தேதி முதல் நடத்த உள்ள உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, இந்த வழக்கை வருகிற 7-ந் தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும். புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் அம்மாநில முதல்-மந்திரி முடிவெடுக்க உள்ளார்’ என்று கூறினார்.

தள்ளிவைக்க வேண்டும்

இதையடுத்து நீதிபதிகள், வார்டுகள் ஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகளுக்கு தீர்வு காண வேண்டும். அதுவரை வேட்புமனுக்கள் பெறுவதை தள்ளிவைக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் குறித்து புதுச்சேரி அரசின் முடிவை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

Next Story