தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்


தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்
x
தினத்தந்தி 4 Oct 2021 7:43 PM GMT (Updated: 4 Oct 2021 7:43 PM GMT)

மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதை உறுதி செய்யும் வகையில் தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

வேலூர் மாவட்டம் திருவலத்தை அடுத்த திருப்பாக்குட்டையில் தாத்தா குடித்து விட்டு வைத்த மதுவை, பழச்சாறு என்று நினைத்து குடித்த மழலை உயிரிழந்ததும், அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் தாத்தாவும் உயிரிழந்து விட்டதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் வேதனையளிக்கின்றன. தாத்தா, பேரனை இழந்து வாடும் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

குடி குடியைக் கெடுக்கும். மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு என்பன உள்ளிட்ட எச்சரிக்கை வாசகங்கள் அனைத்துக்கும் சிறந்த எடுத்துக்காட்டு இது தான். தெருவுக்கு தெரு மதுக்கடைகள் திறக்கப்பட்டிருப்பது தான் தாத்தாவும், பேரனும் உயிரிழப்பதற்கு காரணமாகும். ஒரே நேரத்தில் தாத்தாவையும், பேரனையும் இழந்த குடும்பத்துக்கு ஏற்பட்ட சோகத்தை யாராலும் போக்க முடியாது. மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் மதுக்கடைகளை திறந்து, இலக்கு நிர்ணயித்து மது விற்பனை செய்து வரும் தமிழக அரசு தான், இந்த இரட்டை உயிரிழப்புகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.

மதுவிலக்கு வேண்டும்

தமிழ்நாட்டில் மட்டும் மது குடிப்பதால் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். ஏராளமான பெண்கள் இளம் வயதில் விதவைகள் ஆகின்றனர். 200 வகையான நோய்கள் ஏற்படுகின்றன. குடும்ப வன்முறையும், வறுமையும் பெருகுகின்றன. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம் 10 முதல் 20 சதவீதம் வரை குறைகிறது. இவ்வளவுக்கு பிறகும் மதுவால் கிடைக்கும் வருமானத்துக்காக மது வணிகத்தை அரசு தொடர்வது பெருங்கேடானது. மக்கள் நலம் பேணும் அரசுக்கு இது அழகல்ல.

எனவே, தமிழ்நாட்டில் இனி இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் தடுக்கவும், மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதை உறுதி செய்யவும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். அதற்காக தமிழ்நாட்டில் உள்ள 5 ஆயிரத்துக்கும் அதிகமான மதுக்கடைகளை ஒரே கட்டமாகவோ, படிப்படியாகவோ மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story