ஆசிரியரிடம் ரூ.43 லட்சம் மோசடி போலி வக்கீலுக்கு 6 ஆண்டு சிறை


ஆசிரியரிடம் ரூ.43 லட்சம் மோசடி போலி வக்கீலுக்கு 6 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 4 Oct 2021 8:51 PM GMT (Updated: 4 Oct 2021 8:51 PM GMT)

வழக்கில் இருந்து விடுவிப்பதாக கூறி, ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.43 லட்சம் மோசடி செய்த போலி வக்கீலுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் ஆர்.எம்.காலனியை சேர்ந்தவர் உமையன் (வயது 74). அவருடைய மகன் சிவநாத். என்ஜினீயர். இவர், கடந்த 2015-ம் ஆண்டு ஒரு குற்ற வழக்கில் திண்டுக்கல் வடக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் முருகபவனத்தை சேர்ந்த கார்த்தி (30), உமையனின் வீட்டுக்கு சென்றார். பின்னர் தன்னை ஒரு வக்கீல் என்று கூறினார். மேலும் சிவநாத்துடன் சேர்த்து தனது தம்பி சிவாவையும் போலீசார் வழக்கில் சேர்த்து விட்டதாக தெரிவித்தார்.

அதோடு வழக்கில் இருந்து சிவநாத்தை விடுவித்து கொடுப்பதாக கார்த்தி கூறினார். அதை உண்மை என நம்பிய உமையனிடம், பல தவணைகளாக கார்த்தி பணம் பெற்றார். அந்த வகையில், கார்த்தி மொத்தம் ரூ.43 லட்சம் வாங்கினார்.

மேலும் மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து சிவநாத்துக்கு விடுதலை உத்தரவு பெற்று விட்டதாக கூறி ஒரு உத்தரவு நகலை உமையனிடம் கொடுத்தார். அதை பெற்று கொண்ட உமையன் தனக்கு தெரிந்தவர்களிடம் காண்பித்து விசாரித்தார். அப்போது அந்த உத்தரவு நகல் போலியானது என்றும், கார்த்தி வக்கீல் இல்லை என்பதும் தெரியவந்தது.

6 ஆண்டு சிறை தண்டனை

இதுதொடர்பாக உமையன் அளித்த புகாரின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தியை கைது செய்தனர். இந்த வழக்கு, திண்டுக்கல் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்றது. மாஜிஸ்திரேட்டு கார்த்திக் வழக்கை விசாரித்தார். விசாரணை நிறைவுபெற்ற நிலையில் நேற்று தீர்ப்பளித்தார்.

அதில் குற்றம்சாட்டப்பட்ட கார்த்திக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

Next Story