வரி ஏய்ப்பு புகார்: பிரபல ஜவுளிக்கடை, நிதி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை


வரி ஏய்ப்பு புகார்: பிரபல ஜவுளிக்கடை, நிதி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை
x
தினத்தந்தி 5 Oct 2021 7:10 PM GMT (Updated: 5 Oct 2021 7:10 PM GMT)

வரி ஏய்ப்பு புகார்: பிரபல ஜவுளிக்கடை, நிதி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை.

சென்னை,

காஞ்சீபுரத்தை தலைமையிடமாக கொண்டு 'பச்சையப்பாஸ் சில்க்ஸ்' என்ற ஜவுளி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

காஞ்சீபுரத்தில் 2 ஜவுளிகடைகள், சென்னை தியாகராயநகர் வடக்கு உஸ்மான் சாலை, வேலூர் தொட்டபாளையம் என 4 இடங்களில் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஜவுளிக்கடைகள் உள்ளன. காஞ்சீபுரம் உள்ளிட்ட 4 இடங்களில் செயல்படும் பச்சையப்பாஸ் சில்க்ஸ் ஜவுளி கடைகள், காஞ்சீபுரத்தில் செயல்பட்டு வரும் எஸ்.கே.பி. நிதி நிறுவனம் மற்றும் காஞ்சீபுரம் செங்கல்வராயன் சில்க்ஸ் உள்ளிட்ட 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

பச்சையப்பாஸ் சில்க்ஸ், செங்கல்வராயன் சில்க்ஸ், எஸ்.கே.பி. நிதி நிறுவனம் ஆகியவற்றின் உரிமையாளர்கள் வீடுகளிலும், அவர்களது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிலும், பண்ணை வீடுகளிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நேற்று காலை 8 மணி முதல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள பச்சையப்பாஸ் சில்க்ஸ் கட்டிடத்தின் முதல்மாடியில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. இந்த நிறுவனத்தின் மேலாளரை வரவழைத்து அவரிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

வருமான வரி சோதனையில் 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது, வரி ஏய்ப்பு உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாகவும், சோதனை முடிவில் தான் மேற்படி நிறுவனங்கள் மூலம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டுள்ளதா? வரி ஏய்ப்பு ஏதேனும் நடந்துள்ளதா? என்பது தெரியவரும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story