விமான நிலையத்தில் 8 கிலோ போதை பவுடர் பிடிபட்டது மத்திய போதை தடுப்பு பிரிவினர் நடவடிக்கை


விமான நிலையத்தில் 8 கிலோ போதை பவுடர் பிடிபட்டது மத்திய போதை தடுப்பு பிரிவினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 5 Oct 2021 8:27 PM GMT (Updated: 5 Oct 2021 8:27 PM GMT)

பட்டுப்புடவை பாா்சல்களில் மறைத்து வைத்து ஆஸ்திரேலியாவிற்கு கடத்த முயன்ற 8 கிலோ போதை பவுடர் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சரக்கக பிரிவு பார்சல்களில் ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் சரக்கு விமானத்தில் பெருமளவு போதை பொருட்கள் கடத்தப்படுவதாக சென்னையில் உள்ள மத்திய போதை தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய போதை தடுப்பு பிரிவு தனிப்படையினா் சரக்கு முனையத்திற்கு வந்து ஆஸ்திரேலியா செல்ல இருந்த பாா்சல்களை சோதனை செய்தனா். அப்போது பட்டுப்புடவைகள் கொண்ட பாா்சல்களை சந்தேகத்தின் பேரில் பிரித்து பார்த்த போது. ‘சூடோபெட்ரைன்’ என்ற வகை போதை பொருள் இருந்ததை கண்டு பிடித்தனர். இதையடுத்து 8 கிலோ போதை பவுடர்களை பறிமுதல் செய்து மத்திய போதை தடுப்பு தனிப்படை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கினர்.அந்த பாா்சலை சரக்கு விமானத்தில் ஆஸ்திரேலியாவிற்கு அனுப்ப பதிவு செய்திருந்த ஏஜென்சியிடம் விசாரணை நடத்தினா்.

போதை பொருட்கள் பறிமுதல்

அதில் அந்த பட்டுப்புடவை பாா்சல்கள் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள ஒரு கொரியா் நிறுவனம் மூலம் அனுப்பப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு தனிப்படையினா் காரைக்கால் விரைந்து சென்று அந்த கொரியா் நிறுவனத்தில் விசாரித்த போது, பட்டுப்புடவை பாா்சல்களை அனுப்பிய நபா் சென்னையை சோ்ந்தவா் என தெரியவந்தது.

இதையடுத்து மத்திய போதை தடுப்பு பிரிவு தனிப்படையினா் சென்னை வந்து அந்த நபரை கைது செய்து விசாரித்தனர். அப்போது 4 கிலோ ‘சூடோபெட்ரைன்’ போதைப்பொருளை பட்டுப்புடவை பாா்சல்களில் வைத்து விமானத்தில் ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பியதாக கூறினாா்.

இதையடுத்து மத்திய போதை தடுப்பு பிரிவு தனிப்படையினா் துரிதமாக செயல்பட்டு ஆஸ்திரேலியா நாட்டு அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டு 4 கிலோ போதை பொருள் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்தனர்.

Next Story