காசிமேட்டில் இருந்து மீன்பிடிக்க சென்ற போது நடுக்கடலில் மின்னல் தாக்கி மீனவர் சாவு


காசிமேட்டில் இருந்து மீன்பிடிக்க சென்ற போது நடுக்கடலில் மின்னல் தாக்கி மீனவர் சாவு
x
தினத்தந்தி 5 Oct 2021 8:59 PM GMT (Updated: 5 Oct 2021 8:59 PM GMT)

நடுக்கடலில் மீன்பிடிக்க சென்றபோது மின்னல் தாக்கியதில் வயர்லெஸ் கருவி வெடித்து சிதறி மீனவர் பலியானார்.

திருவொற்றியூர்,

சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் தேசப்பன் என்கிற சுமன் (வயது 40). மீனவர். இவர் நேற்று காலை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தனக்கு சொந்தமான பைபர் படகில் சக மீனவர்களான தியாகராஜன் (40), தமிழரசன் (30) கோவிந்தராஜ் (56) உள்ளிட்ட 3 பேரும் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.இவர்கள் காசிமேடு கடலில் 2 நாட்டிக்கல் தூரத்தில் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, இடி, மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்த நிலையில், வயர்லெஸ் மற்றும் ஜி.பி.எஸ்.கருவி மூலம் கடலில் எந்த திசைக்கு செல்லலாம் என சுமன் பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென ஏற்பட்ட மின்னல் சுமன் மீது தாக்கியதில் சுமன் கையில் வைத்திருந்த ஒயர்லெஸ் கருவி வெடித்து சிதறியது. இதில் சுமனின் தலை, முதுகு, இடது கை உள்ளிட்ட உடல் பகுதியில் தீக்காயம் அடைந்து படகிலே மயங்கி கீழே விழுந்தார்.

மீனவர் பலி

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள் மயங்கி கிடந்த மீனவரை மீட்டு, கரைக்கு கொண்டு வந்தனர். கரையில் வந்து பரிசோதித்ததில் சுமன் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சக மீனவர்கள் காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் சுமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த சுமனுக்கு பபிதா (32) என்ற மனைவியும், லட்சுமி பிரியா (14) என்ற மகளும், அர்ஜூன் (11) என்ற மகனும் உள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.எபினேசர் உயிரிழந்த சுமன் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story