தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் தீவிரம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் தீவிரம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x
தினத்தந்தி 5 Oct 2021 10:50 PM GMT (Updated: 5 Oct 2021 10:50 PM GMT)

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள டெங்கு சிறப்பு வார்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி ‘டீன்’ டாக்டர் தேரணிராஜன், எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் எழிலரசி ஆகியோர் உடன் இருந்தனர். இந்த ஆய்வின் போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

493 குழந்தைகள்

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் டெங்குவின் தாக்கம் அதிகரித்துள்ளது. கொரோனா நோய் பரவலை தடுக்கும் பணியுடன், டெங்குவை ஒழிப்பதற்கும், கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுவதற்கும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளோடு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இணைந்து பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அண்டை மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு ‘தெர்மல் ஸ்கேனிங்’ மூலம் எந்த வகையான காய்ச்சல் என கண்டறியப்பட்டு வருகிறது.

எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் மிகச் சிறப்பான, மகத்தான மருத்துவ சேவையை டாக்டர்கள் செய்கின்றனர். இங்கு கடந்த ஜனவரி மாதம் முதல் டெங்கு பாதிக்கப்பட்டு 493 குழந்தைகள் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் 449 பேர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 41 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆந்திரா, திருவண்ணாமலை போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

5-வது தடுப்பூசி முகாம்

கல்லீரல் சிகிச்சை, தங்களது குழந்தைகளுக்கு கல்லீரல் சிகிச்சை செய்ய உள்ள பெற்றோர்கள், முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் பெற்று பயனடைந்திட கேட்டுக்கொள்கிறோம். 1½ ஆண்டுகளாக குழந்தைகளுக்கு போடக்கூடிய தடுப்பூசிகளை கடந்த கால அரசு நிறுத்தி வைத்திருந்தது. ரூ.12 ஆயிரம் செலவு செய்து தனியார் ஆஸ்பத்திரியில் போடவேண்டிய தடுப்பூசிகளை முதல்-அமைச்சர் அரசு ஆஸ்பத்திரிகளில் குழந்தைகளுக்கு போட அறிவுறுத்தியிருந்தார். அந்த வகையில் தமிழகம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 27 ஆயிரத்து 288 பேருக்கு போடப்பட்டுள்ளது.

தமிழகம் கொரோனா தடுப்பூசி போடும் பணியில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. தமிழகத்தில் 5-வது மெகா தடுப்பூசி முகாம் வருகிற 10-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த முகாமில் 30 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி போடப்பட உள்ளது. வரும் 9-ந் தேதி மாலைக்குள் 25 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசியை 64 சதவீதம் பேரும், 2-வது தவணையை 22 சதவீதம் பேரும் போட்டுள்ளனர். அக்டோபர் இறுதிக்குள் 70 சதவீதத்தை அடைந்துவிடுவோம்.

4 ஆயிரத்து 800 செவிலியர்கள்

தமிழகத்தில் போராட்டம் நடத்திய செவிலியர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்தவர்கள். அவர்களை பணிநிரந்தரம் செய்ய முடியாது என்று ஐகோர்ட்டு தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் உள்ள எந்த மாநிலமும் இதுபோன்ற பணியாளர்களை பணிநிரந்தரம் செய்யவில்லை. மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில் 4 ஆயிரத்து 800 செவிலியர்களை சேர்ப்பதற்கு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியாளர்களை அதில் சேர்ப்பதற்கு 3 பேர் கொண்ட குழுவினை அமைத்திருக்கிறோம். மிக விரைவில் நல்ல தீர்வு எட்டப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story