9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு


9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 6 Oct 2021 12:28 AM GMT (Updated: 6 Oct 2021 12:28 AM GMT)

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது.

சென்னை,

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2 கட்டமாக தோ்தல் அறிவிக்கப்பட்டது.

அதன்படி செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கள்ளக் குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங் களில் இன்றும் (புதன்கிழமை), 9-ந் தேதியும் (சனிக்கிழமை) 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.

2981 பேர் போட்டியின்றி தேர்வு

இந்த தேர்தலில் 27 ஆயிரத்து 3 பதவி இடங்களுக்கு தேர்தல் நடத்த வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இதில் போட்டியிட 98 ஆயிரத்து 151 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு பரிசீலனைக்கு பின்பு ஆயிரத்து 166 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 14 ஆயிரத்து 571 பேர் தங்களது வேட்புமனுக்களை திரும்ப பெற்றனர்.

இதைத்தொடர்ந்து 2 ஆயிரத்து 981 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இன்று முதல்கட்ட தேர்தல்

வழக்கு காரணமாக காஞ்சீ புரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம் கொளத்தூர் கிராம ஊராட்சி தலைவர் பதவி இடத்துக்கான தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 2 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்கள், 21 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி இடங்களுக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

இதன் காரணமாக 9 மாவட்டங்களில் 23 ஆயிரத்து 998 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் 79 ஆயிரத்து 433 பேர் களத்தில் உள்ளனர்.

இந்த 9 மாவட்டங்களில் 39 ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 78 மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவியிடங்களுக்கும், 755 ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவியிடங்களுக்கும், ஆயிரத்து 577 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 12 ஆயிரத்து 252 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும் என மொத்தம் 14 ஆயிரத்து 662 இடங்களுக்கு இன்று (புதன்கிழமை) முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

ஒன்றியங்கள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இலத்தூர், புனித தோமையார்மலை, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காஞ்சீபுரம் மாவட்டத்தில் காஞ்சீபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று முதல்கட்ட தேர்தல் நடக்கிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணைநல்லூர், வானூர், விக்கிரவாண்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரிஷிவந்தியம், திருநாவலூர், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சிகளிலும் முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது.

வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், கே.வி.குப்பம், காட்பாடி, பேரணாம்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, திமிரி, வாலாஜா, திருப்பத்தூர் மாவட்டத்தில் சோலையார்பேட்டை, கந்திலி, நாட்டறம்பள்ளி, திருப்பத்தூர், நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூர், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி, தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையம், கீழபாவூர், மேல நீலிதநல்லூர், வாசுதேவநல்லூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

7 ஆயிரத்து 921 வாக்குச்சாவடிகள்

இந்த இடங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு 7 ஆயிரத்து 921 வாக்குச்சாவடிகளில் நடைபெற உள்ளது. முதல்கட்ட தேர்தலில் 41 லட்சத்து 93 ஆயிரத்து 996 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இந்த தேர்தலில் ஒரு வாக்காளர், கிராம ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி தலைவர், மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் என 4 பதவிக்கு உரியவர்களை தேர்வு செய்ய ஓட்டு போடவேண்டும்.

இதில் மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிகளில் போட்டியிடுபவர்களுக்கு கட்சி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஊராட்சி தலைவர், ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடுபவர்களுக்கு சுயேட்சை சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தயார்நிலையில் வாக்குப்பதிவு மையம்

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் வாக்கு பெட்டிகள், வாக்கு சீட்டுகள், அழியாத மை ஆகியவை வாகனங்கள் மூலம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.

வாக்குச்சாவடி அலுவலர்கள் இன்று காலை 6 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குப்பதிவு மையத்தில் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதை தொடர்ந்து நீண்ட தூரத்தில் இருந்து வர வேண்டிய வாக்குச்சாவடி அலுவலர்களில் பலர் நேற்று இரவே வாக்குப்பதிவு மையத்துக்கு வந்தனர்.

வாக்குப்பதிவுக்கான பாதுகாப்பு பணியில் 17 ஆயிரத்து 130 போலீசாரும், 3 ஆயிரத்து 405 ஊர்க்காவல் படையினரும் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு பணிக்கு ஒதுக்கப்பட்ட போலீசாரும், ஊர்க்காவல்படையினரும் நேற்று இரவே வாக்குப்பதிவு மையத்துக்கு வந்தனர்.

பிரத்யேக ஏற்பாடு

பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடக்கிறது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஒருமணி நேரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும், அதற்கான அறிகுறி உள்ளவர்களும் வாக்களிக்க பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டுப்பெட்டிகள் அந்தந்த வாக்கு எண்ணும் மையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகிறது. 9-ந் தேதி 2-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

இதன் பின்னர் 12-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

Next Story