துப்பாக்கி தொழிற்சாலையில் தோட்டா வெடித்ததில் 2 ஊழியர்கள் படுகாயம்


துப்பாக்கி தொழிற்சாலையில் தோட்டா வெடித்ததில் 2 ஊழியர்கள் படுகாயம்
x
தினத்தந்தி 6 Oct 2021 9:56 PM GMT (Updated: 6 Oct 2021 9:56 PM GMT)

திருச்சி அருகே துப்பாக்கி தொழிற்சாலையில் பரிசோதனையின் போது தோட்டா வெடித்ததில் 2 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர்.

திருச்சி,

திருச்சி மாவட்டம், நவல்பட்டு ஊராட்சி பகுதியில் மத்திய அரசின் படைக்கலன் தொழிற்சாலைகளில் ஒன்றான துப்பாக்கி தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் துப்பாக்கிகள் ராணுவம், காவல்துறை, சிறப்பு படை உள்ளிட்ட பல்வேறு அரசு படை பிரிவினருக்கு பயன்படுத்தப்படுகிறது.இங்கு சமீபகாலமாக மேம்படுத்தப்பட்ட நவீன ஆயுதங்கள், அதற்கான உபகரணங்கள் தயாரிக்கப்படுகிறது.

தோட்டா வெடித்து 2 பேர் படுகாயம்

இங்கு தயாரிக்கப்படும் துப்பாக்கிகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து அங்கேயே பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். அதன்படி, துப்பாக்கி தொழிற்சாலையில் ஆண்டீ மெட்டீரியல் ரைபிள் என்ற ஏ.எம்.ஆர். ரக துப்பாக்கி தயாரிக்கப்பட்டு இருந்தது.

இந்த துப்பாக்கியை அங்கு பணியாற்றும் ஊழியர்களான துப்பாக்கி தொழிற்சாலை குடியிருப்பை சேர்ந்த பிரகாஷ் (வயது 42), திருவெறும்பூர் அருகே வடக்கு காட்டூரை சேர்ந்த அழகேசன் (57) ஆகியோர் பரிசோதித்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென சேம்பரில் இருந்த துப்பாக்கி தோட்டா வெடித்து சிதறியது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

உடனே சக ஊழியர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story