உத்தரபிரதேச பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் கி.வீரமணி விருப்பம்


உத்தரபிரதேச பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் கி.வீரமணி விருப்பம்
x
தினத்தந்தி 6 Oct 2021 10:54 PM GMT (Updated: 6 Oct 2021 10:54 PM GMT)

உத்தரபிரதேச பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் கி.வீரமணி விருப்பம்.

சென்னை,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த 3-ந் தேதி அறப்போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது, ஒன்றிய அரசின் உள்துறை இணை மந்திரியின் மகன் பயணித்த கார் ஊர்வலமாக சென்று கொண்டிருந்த விவசாயிகளின் பின் பக்கம் விரைந்து மோதியதில், அந்த இடத்திலேயே 2 விவசாயிகள் கொடூரமாக கொல்லப்பட்டனர். அதன் எதிர்விளைவாக நடந்த கொந்தளிப்பில் மேலும் பலர் கொல்லப்பட்டனர். ஒரு செய்தியாளர் உள்பட 9 பேர் பலியான கொடுமை அதிர்ச்சிக்குரியது.

வன்முறையே ஆளும் தரப்பின் ஆயுதம் என்று முடிவான நிலையில், மக்கள் கையில் எடுக்க வேண்டிய பேராயுதம் ஒன்று உண்டு. அதுதான் அவர்களின் கையில் இருக்கும் வாக்கு சீட்டு. உத்தரபிரதேசத்தில் அடுத்து நடக்க இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் அந்த ஆயுதத்தை பயன்படுத்தி பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதன் மூலம், இந்தியா முழுவதும் உள்ள மக்கள் மத்தியிலே புதிய எழுச்சி ஏற்பட்டு, அதன் விளைவாக பாசிச சக்திகள் முற்றிலும் இந்தியா முழுவதும் வீழ்த்தப்படும் நிலை ஏற்படும் என்பது உறுதி.

எதிர்க்கட்சிகளும் கருத்து வேற்றுமைகளை விலக்கி வைத்து ஒன்றிணைந்து வெகுமக்கள் சக்தியாக பேருரு எடுத்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story