அரசு ஆஸ்பத்திரிகளில் ‘எக்ஸ்ரே’ முடிவுகளை படச்சுருளில் வழங்க வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்


அரசு ஆஸ்பத்திரிகளில் ‘எக்ஸ்ரே’ முடிவுகளை படச்சுருளில் வழங்க வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்
x
தினத்தந்தி 6 Oct 2021 11:10 PM GMT (Updated: 6 Oct 2021 11:10 PM GMT)

அரசு ஆஸ்பத்திரிகளில் ‘எக்ஸ்ரே’ முடிவுகளை வெள்ளைத்தாளில் வழங்காமல் படச்சுருளில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2021-22-ம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைக்கு ரூ.19 ஆயிரத்து 420 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட திருத்திய நிதிநிலை அறிக்கையில் ரூ.18 ஆயிரத்து 933 கோடி நிதிதான் ஒதுக்கப்பட்டது. அதாவது கிட்டத்தட்ட ரூ.487 கோடி குறைவாக நிதி ஒதுக்கப்பட்டது. இதன் விளைவு, ஊடுகதிர் படங்கள், அதாவது ‘எக்ஸ்ரே’, வெள்ளைத்தாளில் அச்சிடப்பட்டு மக்களுக்கு வழங்கக்கூடிய நிலை தற்போது அரசு ஆஸ்பத்திரிகளில் ஏற்பட்டு இருக்கிறது.

நிதிப் பற்றாக்குறை?

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் ‘எக்ஸ்ரே’ எடுத்துக்கொண்ட மக்களுக்கு அதற்கான முடிவுகள் வெள்ளைத்தாளில் வினியோகிக்கப்படுகின்றன என்றும், அதற்கு காரணம் நிதிப் பற்றாக்குறை என்றும் செய்திகள் வந்துள்ளன. மேலும் படச்சுருளில் முடிவுகள் வழங்கினால் ரூ.50 செலவாகிறது. வெள்ளைத் தாளில் எடுத்தால் எந்தச் செலவும் ஏற்படுவதில்லை என்று ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவிப்பதாக தகவல்கள் வருகின்றன.

மக்கள் எதிர்பார்ப்பு

நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி ‘எக்ஸ்ரே’ முடிவுகளை வெள்ளைத்தாளில் கொடுப்பது தவிர்க்கப்பட வேண்டும். 2-வது கருத்துரை வாங்கும்வகையில் வேறு ஒரு டாக்டரிடம் காண்பிக்க வசதியாக தங்களுக்கு எடுக்கப்படும் ‘எக்ஸ்ரே’வுக்கான முடிவுகள் படச்சுருளில் கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே இதில் முதல்-அமைச்சர் தனிக்கவனம் செலுத்தி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் ‘எக்ஸ்ரே’ முடிவுகளை படச்சுருளில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story