திருவொற்றியூரில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க கடை, வீடுகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு


திருவொற்றியூரில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க கடை, வீடுகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 7 Oct 2021 12:02 AM GMT (Updated: 7 Oct 2021 12:02 AM GMT)

திருவொற்றியூரில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க கடை, வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து நோட்டீஸ் ஒட்ட வந்த ரெயில்வே அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் கிராமத்தெரு, அண்ணாமலை நகரை இணைக்கும் இடத்தில் ரெயில்வே கேட் உள்ளது. அங்கு பணிகள் நடந்து வருவதால் இந்த கேட் 3 மாதங்களாக மூடிக்கிடக்கின்றது. இதனால் திருவொற்றியூர் மேற்கு பகுதியில் வசிக்கும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்த இடத்தில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கவேண்டும் என நீண்ட நாட்களாக பொதுமக்கள் கூறி வந்தனர். அதற்கு தேவைப்படும் இடம் ஒதுக்குவதில் பிரச்சினை இருப்பதால் அது போடப்படாமல் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்தது.

தற்போதைய வடசென்னை எம்.பி. டாக்டர் கலாநிதி வீராசாமி, திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.சங்கர் இருவரும் இணைந்து இந்த பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பொதுமக்கள் மறுப்பு

பொது மக்களுக்கு மாற்று இடமும் கொடுக்க அரசு அதிகாரிகளிடமும் கூறப்பட்டது. ஆனால் ரெயில்வே சுரங்கப்பாதை தவிர பணிகள் நடக்கும்போது பொருட்கள் வைக்க தேவையான இடத்தையும் அதிகாரிகள் கேட்கின்றனர். அந்த இடம் ரெயில்வேக்கு சொந்தமானது எனவும் கூறுகின்றனர்.

ஆனால் 50 ஆண்டுகளுக்கு மேலாக தாங்கள் குடியிருப்பதால் அந்த இடத்தை தர முடியாது. சுரங்கப்பாதைக்கான இடத்தை மட்டும் தருகிறோம். அளவீடுகளை குறித்து கொடுங்கள், நாங்களே இடிக்கிறோம். எந்திரம் உதவியால் இடிக்க வேண்டாம் என பொதுமக்கள் மறுப்பு தெரிவித்து வந்தனர்.

அதிகாரிகளுடன் வாக்குவாதம்

இந்த நிலையில் நேற்று ரெயில்வே துறையினர், நிலம் எடுக்கும் பணிக்காக நோட்டீஸ் ஒட்ட வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு எண்ணூர் போலீஸ் உதவி கமிஷனர் பரமானந்தன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து ரெயில்வே சுரங்கப்பாதைக்காக வீடு, கடைகளை அகற்றுவது தொடர்பாக நோட்டீஸ்களை அதிகாரிகள் ஒட்டிச்சென்றனர்.

இதற்கு பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்.

Next Story