அ.தி.மு.க. ஆட்சியில் அம்மா மினி கிளினிக்குகளுக்கு நர்சுகள் நியமிக்கப்படவில்லை ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்


அ.தி.மு.க. ஆட்சியில் அம்மா மினி கிளினிக்குகளுக்கு நர்சுகள் நியமிக்கப்படவில்லை ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்
x
தினத்தந்தி 7 Oct 2021 7:51 PM GMT (Updated: 7 Oct 2021 7:51 PM GMT)

அ.தி.மு.க. ஆட்சியில் அம்மா மினி கிளினிக்குகளுக்கு நர்சுகள் யாரும் நியமிக்கப்படவில்லை எனவும், இல்லாத செவிலியர்களுக்கு ஏன் சம்பளம் கொடுக்க வேண்டும் எனவும் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார்.

சென்னை,

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி உள்பட இந்தியா முழுவதும் உள்ள 35 ஆஸ்பத்திரிகளில் ‘பி.எம். கேர்ஸ்’ நிதி மூலம் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் தயாரிக்கும் நிலையங்களை பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று இயக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரி ‘டீன்’ டாக்டர் தேரணிராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

‘எக்ஸ்ரே’ படச்சுருள்

கடந்த வாரம் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் எக்ஸ்ரே செய்யப்பட்டு, அதன் முடிவு காகிதத்தில் வழங்கப்படுகிறது என்கிற புகார் ஓரிரு ஊடகங்களில் வெளியிடப்பட்டது. அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் எக்ஸ்ரே என்பது டிஜிட்டல் மயமாகிவிட்டது. எக்ஸ்ரே முடிவுகள் ‘வாட்ஸ் அப்’ மூலம் சம்பந்தப்பட்ட டாக்டர்களுக்கு அனுப்பப்பட்டு, முடிவுகளை டாக்டர்கள் நேரடியாக பார்க்க முடிகிறது. என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அனைத்து ஆஸ்பத்திரியிலும் காகிதத்தில்தான் எழுதி கொடுக்கிறார்கள்.

ஆனால் ‘எக்ஸ்ரே’ படச்சுருளுக்கு பதிலாக காகிதத்தில் எழுதி கொடுப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. உண்மையில் எல்லா இடங்களிலும் ‘எக்ஸ்ரே’ படச்சுருள் கையில் கொடுப்பது நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இது தெரியாமல் தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஏதோ நிதிச்சுமையின் காரணமாக படச்சுருளுக்கு பதிலாக காகிதத்தில் எக்ஸ்ரே வழங்கப்படுவதாக, அதை பெரிதுப்படுத்தி அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

ரூ.487 கோடி

அ.தி.மு.க. ஆட்சியில் மினி கிளினிக்குகளுக்கு ரூ.144 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அதில் நர்சுகளுக்கு சம்பளம் என அறிவித்தீர்கள். நர்சுகளை எங்கே பணியமர்த்தினீர்கள். சம்பளம் வழங்கினீர்கள்? இல்லாத நர்சுகளுக்கு ஏன் ரூ.487 கோடி நிதி ஒதுக்க வேண்டும்?. மத்திய அரசிடமிருந்து கொரோனா மறு சீரமைப்பு பணிகளுக்கு ரூ.800 கோடி அளவில் நிதியை பெற்றிருக்கிறோம். இதன் மூலம் புதிதாக நியமிக்கப்படும் 4 ஆயிரத்து 900 நர்சுகளுக்கு சம்பளம் வழங்கப்படும்.

நேருக்குநேர் விவாதிக்க...

அ.தி.மு.க. ஆட்சியில் முழுகவச உடை, முககவசம், கொரோனா டாக்டர்களுக்கு சாப்பாடு, தங்குமிடம் என அனைத்தும் அதிகவிலை கொடுக்கப்பட்டது.

தி.மு.க. அரசு எதிலாவது குறைவாக நிதி ஒதுக்கினோம் என்று சொன்னால், நேராக விவாதிக்க தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story