டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி தி.மு.க. எம்.எல்.ஏ. போராட்டம்


டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி தி.மு.க. எம்.எல்.ஏ. போராட்டம்
x
தினத்தந்தி 7 Oct 2021 8:52 PM GMT (Updated: 7 Oct 2021 8:52 PM GMT)

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்களுடன் சேர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ. 6½ மணி நேரமாக தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்,

திருப்பூர் காலேஜ் ரோடு கொங்கணகிரி பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. குடியிருப்பு, முருகன் கோவில், தனியார் பள்ளிகள் அமைந்துள்ள பகுதியில் உள்ள இந்த கடையால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள். மதுக்கடைக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று

திருப்பூர் தெற்கு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. செல்வராஜ் மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இதைத்தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) அந்த டாஸ்மாக் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தி.மு.க. எம்.எல்.ஏ. தர்ணா

ஆனால் நேற்று காலை 10 மணிக்கு வழக்கம் போல் அந்த டாஸ்மாக் கடை செயல்பட்டது. மேலும் விற்பனைக்காக கடைக்கு லாரியில் மதுபாட்டில்கள் கொண்டு வந்து இறக்கப்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் செல்வராஜ் எம்.எல்.ஏ. டாஸ்மாக் கடைக்கு வந்தார். இதுகுறித்து அங்கிருந்த மேற்பார்வையாளரிடம் கேட்டபோது, கடையை மாற்ற தங்களுக்கு உத்தரவு இதுவரை வரவில்லை என்று தெரிவித்தார்.

உயர் அதிகாரிகள் உறுதி அளித்த பின்னரும் கடையை மாற்றாமல் இருப்பது குறித்து அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ. வாக்குவாதம் செய்தார். மேலும் டாஸ்மாக் கடைக்கு முன்பு நாற்காலி போட்டு அமர்ந்து பொதுமக்களுடன் இணைந்து சுமார் 6½ மணி நேரமாக தர்ணாவில் ஈடுபட்டார்.

இதையடுத்து, அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு அந்த டாஸ்மாக் கடையை மூடினர். டாஸ்மாக் கடையை அகற்ற தி.மு.க. எம்.எல்.ஏ. போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story