உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்


உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 Oct 2021 10:50 PM GMT (Updated: 7 Oct 2021 10:50 PM GMT)

ஐகோர்ட்டு உத்தரவை தேர்தல் ஆணையம் முழுமையாக நிறைவேற்றி உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னை,

ஊரக உள்ளாட்சித்தேர்தலில், இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய ஜனநாயக படுகொலையையும், தனிமனித சுதந்திரத்தையும் பறிக்கின்ற வகையிலே, மனித உரிமை மீறலையும் தி.மு.க. கையில் எடுத்திருக்கிறது.

தி.மு.க. அரசு காவல் துறையை தன் கைப்பாவையாக்கி, அரசு ஊழியர்களை தன்னுடைய ஏவல் துறையாக மாற்றி, தேர்தலில் தில்லுமுல்லுகளை செய்து, திறம்பட செயலாற்றக்கூடிய அ.தி.மு.க. செயல்வீரர்கள், வீராங்கனைகளின் பணிகளை முடக்கும் விதமாக, காவல் துறையை ஏவி அவர்களுடைய பணிக்கு முட்டுக்கட்டை போடுகிறது.

அ.தி.மு.க. வெற்றியை தடுக்கும் முயற்சி

குறிப்பாக, பெரும்பாக்கம், ஒட்டியம்பாக்கம் ஆகிய ஊராட்சிகள் காலம் காலமாக அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்து வரும் நிலையில், ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளரும், பரங்கிமலை மேற்கு ஒன்றிய செயலாளருமான பெரும்பாக்கம் இ.ராஜசேகரும், அவரது குடும்பத்தினரும் அந்தப்பகுதியிலே உள்ளாட்சி தேர்தலில் தொடர்ந்து வெற்றிபெற்று வருகின்றனர்.

மக்கள் செல்வாக்கு படைத்த, நியாயமான முறையிலே பொறுப்பை கையாண்டு மக்கள் பணியாற்றிய பெரும்பாக்கம் ராஜசேகர் மற்றும் அவரது குடும்பத்தினரை தேர்தல் பணி செய்யவிடாமல் அ.தி.மு.க.வின் வெற்றியை தடுக்கும் விதமாக, காவல் துறையை ஏவல் துறையாக மாற்றி, தொடர்ந்து அச்சுறுத்தலை தந்து கொண்டிருக்கிறது தி.மு.க. அரசு.

கடும் கண்டனம்

அதேபோல், பல இடங்களில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களையும், கட்சி நிர்வாகிகளையும் தேர்தல் பணியாற்றவிடாமல் போலீசார் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர். இச்செயல் கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.

ஐகோர்ட்டு விரிவான உத்தரவு

ஆளும் அரசின் தேர்தல் விதிமீறலையும், ஜனநாயக விரோதப்போக்கையும் எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் ஏற்கனவே வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், மனுவில் உள்ள அனைத்து சாராம்சங்களையும் உறுதியாக நிறைவேற்றுவதாக ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், ஐகோர்ட்டு விரிவான உத்தரவை பிறப்பித்திருந்தது.

ஆனால், ஐகோர்ட்டு உத்தரவை துச்சமென மதிக்கும் தி.மு.க. அரசை வன்மையாக கண்டிப்பதோடு, ஐகோர்ட்டு உத்தரவை முழுவதுமாக நிறைவேற்றி, நியாயமான முறையில் தேர்தல் ஆணையம் உள்ளாட்சித்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story