கிரீமி லேயர் முறைக்கு முடிவுகட்ட வேண்டும் மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


கிரீமி லேயர் முறைக்கு முடிவுகட்ட வேண்டும் மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 8 Oct 2021 7:19 PM GMT (Updated: 8 Oct 2021 7:19 PM GMT)

கிரீமி லேயர் முறைக்கு முடிவுகட்ட வேண்டும் மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசுத்துறை பணிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பிரதிநிதித்துவம் குறித்து மத்திய அரசு தெரிவித்துள்ள புள்ளிவிவரங்கள் பேரதிர்ச்சியளிக்கின்றன. மத்திய அரசு பணியாளர்களில் வெறும் 17.5 சதவீதம் மட்டுமே பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பது தான் பேரதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் ஆகும். இது இந்தியாவில் சமூகநீதி தழைப்பதற்கு எந்த வகையிலும் உதவாது.

மத்திய அரசின் அனைத்துத் துறைகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் உள்ள பணியாளர்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம் எவ்வளவு? அவர்களுக்கான 27 சதவீதம் இடஒதுக்கீடு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாதது ஏன்? என்பது குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீட்டை உறுதி செய்வதற்காக, கடந்த காலங்களில் அவர்களுக்கு மறுக்கப்பட்ட பணியிடங்களை பின்னடைவு பணியிடங்களாக அறிவித்து, சிறப்பு ஆள்தேர்வு மூலம் அவற்றை ஓ.பி.சி. வகுப்பினரை கொண்டு நிரப்பவேண்டும்.

இவை அனைத்துக்கும் மேலாக பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சமூகநீதி கிடைக்க பெரும் தடையாக இருக்கும், இந்திய அரசியல் சட்டம் உள்ளிட்ட எந்த சட்டத்திலும் இல்லாமல் திணிக்கப்பட்ட கிரீமிலேயர் முறைக்கு முடிவுகட்ட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story