முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலில் 77.43 சதவீதம் வாக்குப்பதிவு மாநில தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு


முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலில் 77.43 சதவீதம் வாக்குப்பதிவு மாநில தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Oct 2021 7:25 PM GMT (Updated: 8 Oct 2021 7:25 PM GMT)

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு நடந்த முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலில் 77.43 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சென்னை,

காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 6-ந் தேதி முதல்கட்ட தேர்தல் நடந்தது.

இதில் மொத்தம் 77.43 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக நேற்று தெரிவித்தது.

காஞ்சீபுரத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

அதிகபட்சமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் 84.30 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 66.71 சதவீத வாக்குகளும் பதிவாகி இருக்கிறது.வேலூர் மாவட்டத்தில் 77.63 சதவீதமும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 80.89 சதவீதமும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 78.88 சதவீதமும், விழுப்புரம் மாவட்டத்தில் 83.66 சதவீதமும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 82.25 சதவீதமும், நெல்லை மாவட்டத்தில் 70.81 சதவீதமும், தென்காசி மாவட்டத்தில் 73.96 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன.

மறு வாக்குப்பதிவு

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிவசைலம் கிராம ஊராட்சியில் வார்டு எண் 2 மற்றும் 3 ஆகியவற்றுக்கு பொதுவாக அமைக்கப்பட்ட இரு வார்டுகளுக்கான வாக்குச்சாவடி எண்.130-ல் (அனைத்து வாக்காளர்களுக்கான வாக்குச்சாவடி) 2-வது வார்டுக்கான உறுப்பினர் பதவியிடம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

முதல்கட்ட தேர்தலின் போது, 2-வது வார்டை சேர்ந்த 45 வாக்காளர்கள் 3-வது வார்டு உறுப்பினர் பதவியிடத்துக்கு வாக்களித்துள்ளனர்.இதைத்தொடர்ந்து, 3-வது வார்டில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று தென்காசி கலெக்டர் மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பினார்.

இதனை பரிசீலித்த ஆணையம், சிவசைலம் கிராம ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு இன்று (சனிக்கிழமை) மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டுள்ளது.

Next Story