‘கிடுகிடு' உயர்வு: ஒரு லிட்டர் பெட்ரோல் மீண்டும் ரூ.101-ஐ தொட்டது டீசல் விலையும் ஏறுமுகம்


‘கிடுகிடு உயர்வு: ஒரு லிட்டர் பெட்ரோல் மீண்டும் ரூ.101-ஐ தொட்டது டீசல் விலையும் ஏறுமுகம்
x
தினத்தந்தி 8 Oct 2021 7:29 PM GMT (Updated: 8 Oct 2021 7:29 PM GMT)

தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் ஒரு லிட்டர் பெட்ரோல் மீண்டும் ரூ.101-ஐ தொட்டு இருக்கிறது. டீசல் விலையும் உயர்ந்துள்ளது.

சென்னை,

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86-க்கும், டீசல் ரூ.79-க்கும் விற்பனை ஆன நிலையில், அதன் பின்னர், ஒவ்வொரு நாளும் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வந்தது. அதிலும் பெட்ரோலை விட டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே சென்றது.

தொடர்ந்து விலை அதிகரித்து வந்து, கடந்த ஆகஸ்டு மாதத்தில் சற்று குறைந்து காணப்பட்டது. விலை குறைந்துவிட்டது என வாகன ஓட்டிகள் சற்று பெருமூச்சு விட்ட நேரத்தில் கடந்த மாதம் இறுதியில் இருந்து மீண்டும் அதன் விலை ஏறுமுகத்தில் பயணிக்க தொடங்கி இருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக நேற்றும் ஏற்றத்துடனேயே பெட்ரோல், டீசல் விலை இருந்தது.

ரூ.101-ஐ தொட்டது

அதன்படி, பெட்ரோல் நேற்று லிட்டருக்கு 26 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 1 காசுக்கு விற்பனை ஆனது. அதே போல் டீசல் லிட்டருக்கு 34 காசு அதிகரித்து, ஒரு லிட்டர் டீசல் 96 ரூபாய் 60 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது.

ஏற்கனவே பெட்ரோல் உச்சத்தில் இருந்த போது கடந்த ஜூலை மாதம் 14-ந்தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101-ஐ தொட்டு இருந்தது. அதன் பின்னர் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு, ரூ.101-க்கு கீழ் வந்த நிலையில், தற்போது 84 நாட்களுக்கு பிறகு மீண்டும் அதே நிலையை தொட்டுள்ளது.

‘கிடுகிடு’ உயர்வு

விலை ‘கிடுகிடு'வென உயர்ந்து வரும் பெட்ரோல் கடந்த 10 நாட்களில் 2 ரூபாய் 5 காசும், டீசல் 2 ரூபாய் 67 காசும் உயர்ந்து இருக்கிறது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக தான் பெட்ரோல், டீசல் விலை உயருவதாக கூறப்படும் அதே வேளையில், கடந்த 2008-ம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 143 டாலருக்கு விற்பனை ஆனபோது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.49-க்கு தான் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 80 டாலருக்கு விற்பனை செய்யும் நிலையில், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101-க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Next Story