மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி 5 நாட்களுக்கு கையிருப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்


மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி 5 நாட்களுக்கு கையிருப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
x
தினத்தந்தி 8 Oct 2021 9:13 PM GMT (Updated: 8 Oct 2021 9:13 PM GMT)

தமிழகத்தில் மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி 5 நாட்களுக்கு கையிருப்பில் உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

சென்னை,

மின்சாரத்துறை சார்பில் ‘மின்னகம்' என்கிற மின்நுகர்வோர் சேவை மையத்தில் பெறப்பட்ட புகார்கள் குறித்தும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் ஏ.செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார்.

இதில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி, பகிர்மான இயக்குனர் மா.சிவலிங்கராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆய்வுக்கூட்டத்தில் செந்தில் பாலாஜி பேசியதாவது:-

நற்பெயரை ஏற்படுத்தும் துறை

மின்சாரத் துறையின் மின்னகத்தில் மின்நுகர்வோரிடம் இருந்து பெறப்பட்ட புகார்களில் 98 சதவீதம் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன.

மின்சாரத் துறை அனைத்துநிலை அலுவலர்களும் மின்நுகர்வோருக்கு இன்னும் சிறப்பான சேவையை வழங்கும் நோக்கத்தோடு பணியாற்றி, தமிழக அரசுக்கும், முதல்-அமைச்சருக்கும் நற்பெயரை ஏற்படுத்தும் துறையாக மின்சாரத்துறையை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பருவமழையை எதிர்கொள்ள தயார்

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் பருவமழை தொடக்கநிலையில் இருக்கிறோம். தரைமட்ட அளவில் இருக்கும் 1,400 பில்லர் மின் பெட்டிகளை விரைவாக உயர்த்த இருக்கிறோம். தமிழகம் முழுவதும் அதிக மற்றும் குறைந்த மின்னழுத்தம் இருக்கும் இடங்கள் எவை என்பது குறித்து கணக்கெடுக்கப்பட்டு, 8 ஆயிரத்து 905 புதிய மின்மாற்றிகள் பொருத்தப்பட்டு வருகின்றன.

பருவமழையை எதிர்கொண்டு சீரான மின்சாரம் வழங்குவதற்கு ஏதுவாக 1 லட்சம் மின்கம்பங்கள் உள்பட அனைத்து உபகரணங்களும் தயார்நிலையில் இருக்கின்றன.

5 நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு

தமிழகத்தில் மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி 4 முதல் 5 நாட்கள் வரை கையிருப்பு இருக்கிறது. ஒருநாள் நிலக்கரியை பயன்படுத்துகிறோம் என்றால், அதற்கடுத்த நாளுக்கு தேவையான நிலக்கரியை வரவழைத்து பெறுகிறோம். நாம் மின்சாரத்தை கொள்முதல் செய்யும் தனியார் நிறுவனங்களுக்குத்தான் நிலக்கரி பற்றாக்குறை இருக்கிறது. 100 சதவீதம் மின்சாரம் வழங்கிய தனியார் நிறுவனங்கள் தற்போது 40 முதல் 50 சதவீதம் வரைதான் கொடுக்கிறார்கள்.

நிலக்கரி விலை உயர்வு, தட்டுப்பாடுதான் அதற்கு காரணமாக இருக்கிறது. போர்க்கால அடிப்படையில் நம்முடைய சொந்த அனல் மின் நிலைய உற்பத்தியை அதிகரித்துள்ளோம். இதன் மூலம் நிலைமையை சமாளித்துக்கொண்டு இருக்கிறோம். அனல் மின் நிலையங்களில் நிலக்கரி காணாமல் போனது தொடர்பான புகார் தொடர்பாக முழுமையான அறிக்கைக்கு காத்திருக்கிறோம். அதில் யார் சம்பந்தப்பட்டு இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story