கோவில்களில் சொத்து விவர தகவல் பலகை வைக்க வேண்டும்: அமைச்சர் சேகர்பாபு


கோவில்களில் சொத்து விவர தகவல் பலகை வைக்க வேண்டும்: அமைச்சர் சேகர்பாபு
x
தினத்தந்தி 9 Oct 2021 4:49 PM GMT (Updated: 9 Oct 2021 4:49 PM GMT)

கோவில்களில் சொத்து விவரம், வருவாய் விவரங்களுடன் கூடிய தகவல் பலகை வைக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் சென்னை மாவட்ட கோவில்களின் மேம்பாடு குறித்து துறையின் இணை-துணை மற்றும் உதவி கமிஷனர்கள், செயல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமை தாங்கினார். இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது:-

கோவில்களில் ஆய்வு

சென்னை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 1,206 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் திருப்பணி, திருத்தேர், திருக்களம் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது குறித்து துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அதிகாரிகளுக்கும் குறைந்தது 20 கோவில்கள் பொறுப்பு அலுவலர்கள் பணியில் உள்ளனர். அந்த பொறுப்பு அலுவலர்கள் ஒரு நாளைக்கு ஒரு கோவில் வீதம் ஆய்வுகளை மேற்கொண்டு அந்த ஆய்வின் அடிப்படையில் கோவில்களுக்கு தேவையான பணிகளை மேற்கொள்ள வேண்டும். கோவில்களின் பணியாளர் பற்றாக்குறை விரைவில் தீர்க்கப்படும்.

பெயர் பலகை

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில், கோவில் சம்பந்தப்பட்ட சொத்து விவரம், வருவாய், வாடகை நிலுவைத்தொகை, பணியாளர்கள் எண்ணிக்கை, முக்கிய விழாக்கள் உள்பட பல்வேறு தகவல்கள் அடங்கிய தகவல் பலகை வைக்கப்பட வேண்டும். சில கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள் முக்கிய திருவிழாக்களுக்கு மட்டும் அவர்களை காணமுடிகிறது. மற்ற நாட்களில் ஒரு உதவியாளரை பணியில் அமர்த்தி கொள்கின்றனர். இது போன்ற நிலை மாற வேண்டும். குடமுழுக்கு நடைபெற தயாராக உள்ள கோவில்களில் விரைவில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story