பெரம்பலூர், கரூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் தென்மேற்கு பருவ காலத்தில் கூடுதலாக மழைப்பொழிவு


பெரம்பலூர், கரூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் தென்மேற்கு பருவ காலத்தில் கூடுதலாக மழைப்பொழிவு
x
தினத்தந்தி 10 Oct 2021 3:27 AM GMT (Updated: 10 Oct 2021 3:27 AM GMT)

தென்மேற்கு பருவ காலத்தில் பெரம்பலூர், கரூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் இயல்பை விட கூடுதலாக மழை பெய்துள்ளது. நிலப்பரப்பில் அதிகபட்சமாக திருமயத்தில் 19 செ.மீ. பதிவானது.

திருச்சி,

தென்மேற்கு பருவ மழை ஜூன் 1-ந்தேதி தொடங்கியது. வழக்கமாக தென்மேற்கு பருவமழையின்போது மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் அதிகமாக மழைபெய்யும். ஆனால் இந்த ஆண்டு அந்த பகுதிகளில் ஜூன், ஜூலை மாதங்களில் மழைப்பொழிவு குறைவாகவே இருந்தது. ஆகஸ்டு மாதமும் அதிக மழை பெய்யவில்லை.

தென்மேற்கு பருவ காலமான கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை மொத்தமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவான சராசரி மழை அளவு 433.2 மி.மீட்டர் ஆகும். இயல்பான மழை அளவு 376.9 மி.மீட்டர் ஆகும். இது இயல்பை விட 15 சதவீதம் அதிகம்.

மலைப்பகுதியில் அதிகபட்ச மழை அளவாக நீலகிரி மாவட்டம் மேல்பவானியில் 22 சென்டி மீட்டர் மழை பதிவானது. நிலப்பகுதியில் அதிகபட்ச மழை அளவாக புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 19 சென்டி மீட்டர் மழை பதிவானது. அதே நேரத்தில் தென்மேற்கு பருவ மழையின்போது தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் தான் இயல்பை விட அதிக மழை பெய்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்களில் 468.7 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் 278.7 மி.மீ. மழையே பெய்ய வேண்டும். இயல்பை விட கூடுதலாக 190 மி.மீ. மழை பெய்துள்ளது. அதாவது 68 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது.

அதே நேரம் கரூர் மாவட்டத்தில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்களில் 270.3 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் 199.4 மி.மீ. மழையே பெய்ய வேண்டும். இயல்பை விட கூடுதலாக 70.9 மி.மீ. மழை பெய்துள்ளது. அதாவது 36 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது.

இதுபோல் திருச்சி மாவட்டத்தில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்களில் 353.1 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் 276.8 மி.மீ. மழையே பெய்ய வேண்டும். இயல்பை விட கூடுதலாக 76.3 மி.மீ. மழை பெய்துள்ளது. அதாவது 28 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்களில் 433.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் 376.9 மி.மீ. மழையே பெய்ய வேண்டும். இயல்பை விட கூடுதலாக 56.3 மி.மீ. மழை பெய்துள்ளது. அதாவது 15 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்களில் 320.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் 330.2 மி.மீ. மழை பெய்ய வேண்டும். ஆனால் இயல்பை விட குறைவாக 10 மி.மீ. மழை பெய்துள்ளது. அதாவது 3 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது.

வரும் நாட்களிலும் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Next Story