காஞ்சீபுரம், சென்னை, வேலூரில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.250 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு


காஞ்சீபுரம், சென்னை, வேலூரில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.250 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 10 Oct 2021 8:41 PM GMT (Updated: 10 Oct 2021 8:41 PM GMT)

காஞ்சீபுரம், சென்னை மற்றும் வேலூரில் நடந்த சோதனையில் ரூ.250 கோடி வரை வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டதுடன், 17 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.1 கோடியே 79 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது.

வருமான வரித்துறை சோதனை

காஞ்சீபுரம் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பச்சையப்பாஸ் சில்க்ஸ் நிறுவனம், எஸ்.கே.பி. நிதி நிறுவனம் மற்றும் செங்கல்வராயன் சில்க்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு சொந்தமாக காஞ்சீபுரம், சென்னை மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் உள்ள 34 இடங்களில் கடந்த 5-ந் தேதி வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 150 அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் மற்றும் நகைகள் குறித்து வருமான வரித்துறை மதிப்பீடு செய்து உள்ளது.

நிதி நிறுவனங்கள்

இதுகுறித்து டெல்லி வருமான வரித்துறை கமிஷனர் சுரபி அலுவாலியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வருமான வரித்துறை கடந்த 5-ந் தேதி காஞ்சீபுரம், சென்னை மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் உள்ள நிதி நிறுவனங்கள் மற்றும் பட்டுச்சேலைகள் மற்றும் ஆடைகள் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு சொந்தமான 34 இடங்களில் சோதனை நடத்தியது. இந்த நிதி நிறுவனங்கள் அங்கீகரிக்கப்படாத வர்த்தகத்தில் ஈடுபட்டதுடன், கடந்த சில ஆண்டுகளாக ரூ.400 கோடி வரை முதலீடு கையாளப்பட்டுள்ளதும், முழுத்தொகையையும் ரொக்கமாக செலுத்தியதும் சோதனையின்போது தெரியவந்தன. கமிஷன் மற்றும் ஈவுத்தொகை மூலம், கணக்கிடப்படாத வருமானத்தை சம்பாதித்ததற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன.

அத்துடன், ஏராளமான உறுதிமொழி குறிப்புகள், கையொப்பமிடப்பட்ட பிந்தைய தேதியிட்ட காசோலைகள் மற்றும் வழங்கப்பட்ட கடன்களுக்கு அல்லது நிதிநிறுவன சந்தாதாரர்களிடமிருந்து பிணையமாக வைக்கப்பட்ட வக்கீல் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. குறிப்பிட்ட நிறுவனம், கணக்கிடப்படாத வட்டி வருமானத்தைச் சம்பாதித்ததும், கணக்கில் வராத பெரிய முதலீடுகளையும், செலவுகளையும் கையாண்டதும் தெரியவந்துள்ளன. நிதி நிறுவனத்தைச் சேர்ந்த குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளின் பெயர்களில் பதிவு செய்யப்பட்ட பல சொத்து ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளன.

கணக்கில் வராத பணம் ரூ.1.35 கோடி

இந்த குழு உறுப்பினர்களுக்கு சொந்தமான சொத்துகளில் அரண்மனை வீடுகள் அடங்கியுள்ளன. பண்ணை வீடுகள் மற்றும் நிலங்கள், ஆடம்பர வாகனங்கள் முதலியன இருப்பதும் தெரியவந்துள்ளது. வரிப்பணத்தில் மிகக் குறைந்த வருமானத்தை வெளிப்படுத்தியுள்ளனர். நிதி நிறுவனங்களின் பல கூட்டாளிகளும், முதலீட்டாளர்களும் விசாரிக்கப்பட்டனர். அவர்கள் கணக்கிடப்படாத முதலீடுகளை செய்ததாகவும், கணக்கிடப்படாத வருமானத்தை சம்பாதித்ததாகவும் ஒப்புக்கொண்டனர். இந்த நிதி நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.1.35 கோடி கணக்கில் வராத பணமும், 7.5 கிலோ தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, ரூ.150 கோடிக்கு மேல் வெளிப்படுத்தப்படாத வருமானமும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

9.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

பட்டுச்சேலைகள் மற்றும் ஆடைகள் விற்பனை செய்யும் நிறுவனங்களில் கடந்த 4 ஆண்டுகளாக விற்பனை குறைத்து காண்பிக்கப்பட்டுள்ளது தெரியவந்திருக்கிறது. மென்பொருள்களை பயன்படுத்தி விற்பனை செய்ததற்கான புள்ளிவிவரங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் இருந்து கணக்கில் வராத ரொக்கம் ரூ.44 லட்சமும், 9.5 கிலோ தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வெளிப்படுத்தப்படாத வருமானம் ரூ.100 கோடிக்கு மேல் இருப்பதும் தெரியவந்துள்ளது. ஆக காஞ்சீபுரம், சென்னை மற்றும் வேலூரில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் ரூ.250 கோடி வரை வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டதுடன், 17 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.1 கோடியே 79 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story