கட்டாய மதமாற்றத்தை தடுக்க சிறப்பு சட்டம் விஸ்வ இந்து பரிஷத் செயல்தலைவர் வலியுறுத்தல்


கட்டாய மதமாற்றத்தை தடுக்க சிறப்பு சட்டம் விஸ்வ இந்து பரிஷத் செயல்தலைவர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 Oct 2021 7:21 PM GMT (Updated: 11 Oct 2021 7:21 PM GMT)

கட்டாய மதமாற்றத்தை தடுக்க இந்தியா முழுவதும் சிறப்பு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத் செயல் தலைவர் அலோக்குமார் கூறினார்.

சென்னை,

விஸ்வ இந்து பரிஷத் அகில உலக செயல் தலைவர் அலோக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் கட்டாய மதமாற்றத்தின் மூலம் மதம் மாறுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கட்டாய மத மாற்றத்தை தடுக்க 11 மாநிலங்கள் சிறப்பு சட்டம் இயற்றி உள்ளன.

இந்த தடை சட்டம் இந்தியா முழுவதும் கொண்டு வரப்பட வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசை விஸ்வ இந்து பரிஷத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

கண்டனம்

தமிழகத்தை பொறுத்தமட்டில் போலி வாக்குறுதிகள், பண முதலீடு, மிரட்டல் போன்றவற்றின் மூலம் மதமாற்றம் நடக்கிறது. மதமாற்றத்தை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்துமத தலைவர்களை சந்தித்து வலியுறுத்தி வருகிறோம்.

தமிழக அரசு இந்து கோவில்களில் உள்ள நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக்கி அதனை வங்கிகளில் வைத்து அதன்மூலம் கிடைக்கும் வட்டியை கோவில் பணிகளுக்கு செலவிடும் முயற்சி கண்டிக்கத்தக்கது.

இந்த முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும். பக்தர்கள் கோவிலுக்கு அளித்த நன்கொடை மத நம்பிக்கை சார்ந்தது. இது காலம் காலமாக நடந்து வரும் சம்பிரதாயம். இதில், அரசு தலையிட உரிமை இல்லை.

சட்டப்பூர்வ நடவடிக்கை

மாநில அரசு ஒருபோதும் இந்து கோவில்கள் மீது உரிமை கொண்டாடக்கூடாது. கோவில் விவகாரங்களில் குறைந்தபட்ச தலையீடு மட்டுமே அரசுக்கு இருக்கும் வகையில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்து கோவில்கள், மடங்களை இந்து சமுதாயத்திடம் ஒப்படைக்க வேண்டும். இந்து கோவில்களை அரசுவிடுவிக்க நாடு தழுவிய முயற்சியை விஸ்வ இந்து பரிஷத் மேற்கொள்ள இருக்கிறது.

இதற்காக நாடு முழுவதும் இந்து மத தலைவர்கள்,மடாதிபதிகளை சந்தித்து முயற்சி மேற்கொள்ள இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மத்திய இணை செயலாளர் தாணுமாலயன், தென்பாரத அமைப்பாளர் நாகராஜன், வட தமிழக செயலாளர் ஞானகுரு ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story