அங்கன்வாடி மையங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு


அங்கன்வாடி மையங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 11 Oct 2021 10:53 PM GMT (Updated: 11 Oct 2021 10:53 PM GMT)

சென்னையில் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமானதாக உள்ளதா? என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

சென்னை,

தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு சத்தான, தரமான உணவுகள் வழங்கப்பட வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதன் ஒரு கட்டமாக சென்னை சிந்தாதிரிப்பேட்டை, பெரியமேடு, எழும்பூர் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி பி.சதீஷ்குமார் தலைமையில் என்.ராஜா, என்.எச்.ஜெயகோபால் உள்பட அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆய்வில் ஈடுபட்டனர்.

குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துமாவு, குடிநீர் உள்ளிட்டவை தரமானதாக வழங்கப்படுகிறதா?, உரிய காலக்கெடுவுக்குள் பயன்படுத்தப்படுகிறதா? என்று ஆய்வு நடத்தினர்.

குழந்தைகள் நலன்

அதனைத்தொடர்ந்து சமையலறைக்கு சென்ற அதிகாரிகள் பாத்திரங்கள் முறையாக கழுவி பராமரிக்கப்படுகிறதா? என்று பார்த்தனர். தயாராகி இருந்த முட்டை, கீரை உள்ளிட்ட உணவுகளை சாப்பிட்டு ஆராய்ந்தனர். முட்டைகள் தரமானதாக இருக்கிறதா? எனவும் பரிசோதித்தனர். அதனைத்தொடர்ந்து அங்கன்வாடி பணியாளர்களுக்கு குழந்தைகளின் நலன், தரமான சாப்பாடு தயாரித்தல் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் குழுஅறிவுரை வழங்கினர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘தமிழக அரசின் உத்தரவுப்படி குழந்தைகள் நலனை கருத்தில் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது’’, என்றனர்.

கலப்பட பொருட்கள் தவிர்ப்பது எப்படி?

முன்னதாக உணவு பாதுகாப்புத்துறை சார்பில் வாடிக்கையாளர்களுக்கு தரமான உணவுகளை வழங்குவது குறித்து ஓட்டல் உரிமையாளர்கள்-ஊழியர்களுடனான ஆலோசனை கூட்டம் எழும்பூரில் நடந்தது.

இதில் பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்த்து வாழை இலையில் உணவு பரிமாறப்பட்ட வேண்டும், ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மறுமுறை சமையலுக்கு பயன்படுத்தக்கூடாது, செயற்கை நிறமூட்டிகளை பயன்படுத்தக்கூடாது போன்ற பல்வேறு அறிவுரைகளை ஓட்டல் உரிமையாளர்களுக்கு அதிகாரி பி.சதீஷ்குமார் வழங்கினர்.

இந்த கூட்டத்தில் கலப்பட பொருட்களை எப்படி கண்டறிவது? என்பது குறித்த செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது. அதேவேளை தரமற்ற உணவுகளை தயார் செய்து விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Next Story