கலைஞர் வருமுன் காப்போம் திட்டம் மூலம் இன்று 50 இடங்களில் மருத்துவ முகாம்


கலைஞர் வருமுன் காப்போம் திட்டம் மூலம் இன்று 50 இடங்களில் மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 11 Oct 2021 11:47 PM GMT (Updated: 11 Oct 2021 11:47 PM GMT)

தமிழகத்தில் கலைஞர் வருமுன் காப்போம் திட்டம் மூலம் 50 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கடந்த 2006-ம் ஆண்டு வருமுன் காப்போம் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு பலர் பயன்பெற்றனர். அ.தி.மு.க. ஆட்சிகாலமான கடந்த 10 ஆண்டுகளில் இந்த திட்டம் இல்லாமல் செய்தனர். இந்தியா முழுவதும் பெரிதும் பாராட்டப்பட்ட இந்த திட்டத்தை மேம்படுத்தி, கூடுதல் மருத்துவ வசதியுடன் சேலத்தில் முதல்-அமைச்சர் மீண்டும் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 1,250 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். கலைஞர் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று (செவ்வாய்கிழமை) 50 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. காலை 9.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 4 மணி வரை இந்த மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. சென்னையில் 2 இடங்களில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம் இன்று நடைபெற உள்ளது.

67 சதவீதம் பேர்

அந்த முகாம்களில் 20-க்கும் மேற்பட்ட சிகிச்சைகள் வழங்கப்பட இருக்கிறது. மேல் சிகிச்சைகள் தேவைப்படுவோருக்கு உடனடியாக மாவட்ட ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். முதல்-அமைச்சரின் காப்பீடு திட்டத்திற்கான அட்டைகளும் இம்முகாம்களில் வழங்கப்பட இருக்கின்றன. தமிழகத்தில் 11 லட்சத்து 2 ஆயிரம் பேர் 2-வது தவணை தடுப்பூசி போட்டு உள்ளனர். இன்று வழக்கம்போல் தடுப்பூசி மையங்கள் செயல்படும்.

தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் வரை 64 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 5-வது மெகா தடுப்பூசி முகாம் மூலம் 3 சதவீதம் உயர்ந்து 67 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகளில் 850 மருத்துவ இடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 800 மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இடங்களுக்குத்தான் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. 4 மருத்துவ கல்லூரிகளுக்கு ஆய்வுக்கு மத்திய குழு வருவதாக உறுதி அளித்துள்ளார்கள்.

‘நீட்’ தேர்வு

நீட் தேர்வு எழுதிய 1 லட்சத்து 10 ஆயிரத்து 471 மாணவர்களுக்கு தொடர்ந்து 333 மன நல ஆலோசகர்கள், மன நல மருத்துவர்கள் மூலம் அவர்களிடையே தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மன அழுத்தத்தில் உள்ளதாக கண்டறியப்பட்டு அவர்களின் மனநலனை மேம்படுத்தவும், தொடர்ந்து ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீட் குறித்த சட்ட முன்வடிவை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 12 மாநில முதல்-மந்திரிகளுக்கும் அனுப்பி வைத்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க கடிதம் எழுதியுள்ளார். மேலும் அந்த அறிக்கையை 7 மாநில மொழிகளில் மொழிபெயர்த்து, தொடர்புடைய மாவட்டங்களுக்கு அனுப்பும் பணியையும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு பல்வேறு முயற்சிகளை முதல்-அமைச்சர் மேற்கொண்டும் வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story