9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் நடக்கிறது


9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் நடக்கிறது
x
தினத்தந்தி 11 Oct 2021 11:59 PM GMT (Updated: 11 Oct 2021 11:59 PM GMT)

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் 74 இடங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகிறது. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது.

74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 23 ஆயிரத்து 998 பதவியிடங்களுக்கு நடந்த இந்த தேர்தலில் 79 ஆயிரத்து 433 பேர் போட்டியிட்டனர்.

மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு கட்சி சார்பில் போட்டி என்பதால் கட்சி சார்பில் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டனர்.

ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு சுயேச்சையாக மட்டுமே போட்டியிட முடியும் என்பதால் அனைத்து வேட்பாளர்களும் சுயேச்சையாக களம் இறங்கினர்.

இன்று வாக்கு எண்ணிக்கை

14 ஆயிரத்து 573 வாக்குச்சாவடிகளில் நடந்த இந்த தேர்தலில் இருகட்டங்களையும் சேர்த்து மொத்தம் 77.95 சதவீத வாக்குகள் பதிவாகின.

வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில் வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்பட்ட 41 ஆயிரத்து 500 வாக்குப்பெட்டிகள் 74 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலாவதாக வாக்கு பெட்டிகள் உள்ள அறையின் சீல், தேர்தல் அலுவலர், வேட்பாளர்கள் முன்னிலையில் உடைக்கப்பட்டு அங்கிருந்து வாக்குப்பெட்டிகள் வாக்குகளை எண்ணும் பொதுக்கூடத்துக்கு எடுத்து வரப்படும்.

வாக்குச்சீட்டுகள் பிரிப்பு

பின்னர் வேட்பாளர்கள், ஏஜெண்டுகள் முன்னிலையில் வாக்குப்பெட்டியில் உள்ள வாக்குச்சீட்டுகள் பெரிய பெட்டி ஒன்றில் கொட்டப்படும். பின்னர் அவற்றை 50-50 சீட்டுகளாக பிரித்து கட்டுவர்.

இந்தப்பணி முடிந்ததும் அந்த கட்டுகள் இன்னொரு அறைக்கு கொண்டு செல்லப்படும். அங்கு கட்டுகளை பிரித்து மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலருக்கான மஞ்சள் நிற வாக்குச்சீட்டு, ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலருக்கான பச்சை நிற சீட்டு, ஊராட்சி தலைவருக்கான இளம் சிவப்பு நிற சீட்டு, ஊராட்சி உறுப்பினருக்கான வெள்ளை நிற சீட்டு ஆகியவற்றை தனித்தனியாக பிரித்தெடுப்பார்கள்.

இவ்வாறு பிரிக்கப்பட்ட சீட்டுகளை மீண்டும் 50-50 ஆக மீண்டும் கட்டுவார்கள். ஒவ்வொரு மையத்திலும் 4 பதவிகளுக்கான வாக்குகளை எண்ணுவதற்கு தனித்தனியாக அறைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. அந்த அறைகளுக்கு இந்த வாக்கு சீட்டுகள் பதவிகள் வாரியாக கொண்டு செல்லப்படும்.

சில மணி நேரத்தில் முடிவு

இதைத்தொடர்ந்து, ஒவ்வொரு வேட்பாளருக்கும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெறும். ஒவ்வொரு கட்டுகளையும் பிரித்து அதில் உள்ள வாக்குச்சீட்டுகளில் யார்-யாருக்கு வாக்குகள் பதிவாகி இருக்கிறது என்பதை பார்த்து வேட்பாளர் வாரியாக பிரித்து வைக்கப்படும். இதன்பின்னர் அவை எண்ணப்படும்.

ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு குறைவான வாக்குகள் என்பதால் இந்த பதவிகளுக்கான தேர்தல் முடிவுகள் வாக்குகள் எண்ண தொடங்கிய சில மணி நேரத்தில் இருந்து தெரிய தொடங்கும். பெரும்பாலும் மதியத்துக்குள் இந்த பதவிகளுக்கான முடிவுகள் தெரிந்து விடும்.

குழப்பங்கள் இருக்கலாம்

வாக்குச்சீட்டு முறை என்பதால் ஏராளமான குழப்பங்கள் இருக்கலாம் என்றும், அவ்வாறு குழப்பம் ஏற்படும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட பதவிகளுக்கான முடிவுகளை அறிவிக்க காலதாமதம் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.

ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிக வாக்குகள் என்பதால் இந்த வாக்குகளை எண்ணி முடிக்க அதிக நேரம் ஆகலாம் என தெரிகிறது.

மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவியை பொறுத்தமட்டில் 1 லட்சம் முதல் 1½ வரையிலான வாக்குகளை எண்ண வேண்டியது இருப்பதால் இந்த பதவிக்கான முடிவை அறிவிக்க நள்ளிரவு வரை ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.

செல்லாத வாக்குகள்

இந்த தேர்தலில் மொத்தம் 4 ஓட்டுகள் போட வேண்டும் என்பதால் வாக்குப்பதிவின் போது வாக்காளர்கள் மத்தியில் கடும் குழப்பம் நிலவியது. 4 சீட்டுகளிலும் தனித்தனியாக இந்த ஓட்டுகளை பதிவு செய்ய வேண்டிய நிலையில் விவரம் தெரியாமல் சிலர் ஒரே சீட்டில் 4 ஓட்டுகளையும் பதிவு செய்து இருக்கிறார்கள்.

இதன் காரணமாக ஏராளமான செல்லாத ஓட்டுகள் பதிவாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. செல்லாத ஓட்டுகளை தீர்மானிக்க வேட்பாளர்கள், தேர்தல் அலுவலர்கள் இடையே பிரச்சினைகள் ஏற்படலாம் என்றும், அதனை முடிவுக்கு கொண்டுவர காலதாமதம் ஆகலாம் என்றும் தெரிகிறது. இதன்காரணமாக தேர்தல் முடிவை அறிவிப்பதிலும் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சி.சி.டி.வி. கேமரா

வாக்கு எண்ணிக்கை சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. ஒரு வேட்பாளருக்கு ஒரு ஏஜெண்டு என்ற அடிப்படையில் வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

வாக்கு சீட்டுகளில் ஏதேனும் திருத்தம் செய்து விடக்கூடாது என்பதற்காக ஏஜெண்டுகள் பேனா கொண்டு செல்ல அனுமதியில்லை. பதிவான வாக்குகளை குறிப்பதற்காக பென்சில் மட்டுமே கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர தண்ணீர் பாட்டிலோ, வேறு எந்த பொருட்களோ கொண்டு செல்ல அனுமதி கிடையாது. செல்போன்களை கொண்டு செல்லவும் அனுமதி கிடையாது.

மூன்றடுக்கு பாதுகாப்பு

அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவை அறிவிக்கும்போது பல இடங்களில் மோதல்கள் நடப்பதற்கு வாய்ப்புள்ளதால் வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த 9 மாவட்டங்களை தவிர்த்து ஏனைய 28 மாவட்டங்களில் 789 காலி இடங்களுக்கு நடந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று நடக்கிறது.

Next Story