துப்பாக்கி முனையில் பெண்ணிடம் நகை பறித்து விட்டு ஓட்டம்: என்கவுண்ட்டரில் வடமாநில கொள்ளையன் சுட்டுக்கொலை


துப்பாக்கி முனையில் பெண்ணிடம் நகை பறித்து விட்டு ஓட்டம்: என்கவுண்ட்டரில் வடமாநில கொள்ளையன் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 12 Oct 2021 12:12 AM GMT (Updated: 12 Oct 2021 12:12 AM GMT)

ஸ்ரீபெரும்புதூரில் பெண்ணிடம் துப்பாக்கி முனையில் நகை பறித்து தப்பி ஓடி பதுங்கிய வடமாநில கொள்ளையன் போலீசாரால் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பென்னலூர் பஸ் நிலையத்தில் இந்திரா (வயது 54) என்ற பெண் நேற்று முன்தினம் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த 2 வடமாநில கொள்ளையர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி இந்திரா அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையை வழிப்பறி செய்தனர்.

உடனே அவர் சத்தம் போட்டார். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அந்த கொள்ளையர்களை பிடிக்க விரட்டி சென்றனர். ஆனால் கொள்ளையர்களில் ஒருவர் துப்பாக்கியை காட்டி சுட்டு விடுவதாக மிரட்டினார்.

இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் சிதறி ஓடினர். அதற்குள் 2 கொள்ளையர்களும் தப்பி சென்று விட்டனர்.

காட்டுக்குள் பதுங்கிய கொள்ளையர்கள்

பெண்ணிடம் வழிப்பறி செய்த 2 கொள்ளையர்களும் பென்னலூர் அருகில் உள்ள ஏரி பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் சென்றனர். இதனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. சத்திய பிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 10 தனிப்படை அமைத்து வழிப்பறி கொள்ளையர்களை தேடி வந்தனர்.

அடர்ந்த காட்டுப்பகுதியாக இருந்ததால் போலீசாரால் உடனடியாக உள்ளே செல்ல முடியவில்லை. இதனையடுத்து டிரோன் கேமரா (பறக்கும் கேமரா) உதவியுடன் தேடி வந்தனர். அதற்குள் இரவு நேரம் ஆனதால் வழிப்பறி கொள்ளையர்களை தேடும் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது.

500 போலீசார்

அதன்பின்னர் நேற்று காலை மீண்டும் கொள்ளையர்களை தேடும் பணியை போலீசார் முடுக்கி விட்டனர். இந்தப்பணிக்காக காட்டுப்பகுதிக்கு 500-க்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டனர். தனித்தனி குழுவாக சென்று போலீசார் தங்களது தேடுதல் வேட்டையை தொடங்கினர்.

வழிப்பறி கொள்ளையர்களிடம் கைத்துப்பாக்கி இருந்ததால் மிக ஜாக்கிரதையாக தேடும் பணி நடைபெற்றது.

சுட்டுக்கொலை

நீண்டநேர தேடுதல் வேட்டைக்கு பலன் கிடைத்தது. நேற்று மதியம் 2 மணியளவில் மரங்கள் நிறைந்த பகுதியில் பதுங்கி இருந்த வடமாநில கொள்ளையர்கள் போலீசாரின் கண்ணில் சிக்கினர்.

அப்போது கொள்ளையன் ஒருவர் போலீஸ் ஏட்டு மோகன்தாஸ் என்பவரை கத்தியால் குத்த முயன்றார். அப்போது, போலீசார் கொள்ளையனை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதில் கொள்ளையனின் தலையில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தான்.

ஜார்கண்டை சேர்ந்தவர்

போலீசாரின் இந்த அதிரடி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட கொள்ளையனின் பெயர் முர்தர்ஷா. இவர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். ஸ்ரீபெரும்புதூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார்.

மேலும் வழிப்பறி சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். அவரது கூட்டாளியான நயிம்அக்தர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

போலீசார் இருவருக்கு காயம்

கைதானவரிடம் இருந்து துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த என்கவுண்ட்டரின் போது போலீஸ் தரப்பில் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, போலீசார் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட முர்தர்ஷா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபோல வடமாநிலத்தில் இருந்து வழிப்பறி கொள்ளையர்கள் யாராவது ஊடுருவி உள்ளனரா? என போலீசார் விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர்.

Next Story