தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை இல்லை அமைச்சர் தகவல்


தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை இல்லை அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 12 Oct 2021 12:15 AM GMT (Updated: 12 Oct 2021 12:15 AM GMT)

தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை இல்லை அமைச்சர் தகவல்.

சென்னை,

சென்னை தலைமைச்செயலகத்தில் நிருபர்களுக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பேட்டி வருமாறு:-

தமிழகத்திற்கு மின் உற்பத்திக்கான நிலக்கரி தட்டுப்பாடு இல்லை. தமிழகத்திற்கு 6 நாள் இருப்பு வைத்துக்கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது. அதன்படி தற்போது 4 நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது.

தமிழகத்தில் நாளொன்றுக்கு 56 ஆயிரம் டன் நிலக்கரி தேவை உள்ளது. தினமும் 60 ஆயிரம் டன் நிலக்கரி வரவு வருகிறது. அதன்படி 4 நாட்களுக்கான கையிருப்பாக 2.40 லட்சம் டன் நிலக்கரி தமிழக அரசிடம் சராசரி கையிருப்பாக உள்ளது. எனவேநிலக்கரி தட்டுப்பாட்டுக்கு வாய்ப்பே இல்லை.

தமிழகத்தின் மொத்த மின் தேவையில் 41 சதவீதம் மின்சாரம், அனல்மின் நிலையங்களில் இருந்து கிடைக்கிறது. தமிழக அரசின் சொந்த உற்பத்தியாக 1,800 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தனியார் அனல் மின் நிலையங்களிலிருந்து 2,830 மெகாவாட் பெறப்பட்டு வந்த நிலையில், நிலக்கரி விலை உயர்வு, மழைக்காலத்தில் நிலக்கரி வரத்து குறைவு என்பது போன்ற காரணங்களால், 1,300 மெகாவாட் மின்சாரம்தான் அரசுக்கு தனியார் அனல் மின் உற்பத்தியாளர்கள் மூலம் வழங்கப்படுகிறது.

பற்றாக்குறையான 1,500 மெகாவாட் மின்சாரத்தை ஈடுசெய்ய தமிழக அரசின் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து பெறப்பட்டு வருகிறது.

மத்திய தொகுப்பில் இருந்து நாள்தோறும் 3,500 முதல் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் பெறப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story