தீபாவளிக்கு 16,540 சிறப்பு பஸ்கள்: சென்னையில் 6 இடங்களில் இருந்து இயக்க ஏற்பாடு


தீபாவளிக்கு 16,540 சிறப்பு பஸ்கள்: சென்னையில் 6 இடங்களில் இருந்து இயக்க ஏற்பாடு
x
தினத்தந்தி 12 Oct 2021 12:28 AM GMT (Updated: 12 Oct 2021 12:28 AM GMT)

தீபாவளிக்கு பொது மக்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக 16,540 சிறப்பு பஸ்கள் இயக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை,

தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (நவம்பர்) 4-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆண்டுதோறும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அளித்த பேட்டி வருமாறு:-

ஆலோசனை கூட்டம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்த ஆலோசனை கூட்டம், அமைச்சர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் போக்குவரத்து துறையின் உயர் அதிகாரிகள், காவல்துறை அலுவலர்கள், சென்னை மாநகராட்சி அலுவலர்கள், தாம்பரம் நகராட்சி ஆணையர், பூந்தமல்லி நகராட்சி ஆணையர், சென்னை பெருநகர வளர்ச்சி குழும கண்காணிப்பு பொறியாளர், அனைத்து போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.

16 ஆயிரத்து 540 சிறப்பு பஸ்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை தினசரி இயக்கக்கூடிய 2,100 பஸ்களுடன், 3,506 சிறப்பு பஸ்கள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக, சென்னையில் இருந்து 9,806 பஸ்களும், பிற ஊர்களில் இருந்து இந்த 3 நாட்களுக்கு 6,734 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 16 ஆயிரத்து 540 பஸ்கள் இயக்கப்படும்.

தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு நவம்பர் 5-ந் தேதியில் இருந்து 8-ந் தேதி வரை தினசரி இயக்கக்கூடிய 2,100 பஸ்களுடன், 4,319 சிறப்பு பஸ்களும், மற்ற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 5 ஆயிரம் சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 17 ஆயிரத்து 719 பஸ்களும் இயக்கப்படும்.

எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து...?

நவம்பர் 1-ந் தேதியில் இருந்து 3-ந் தேதி வரை சென்னையில் 6 இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது.

மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை செல்லும் பஸ்கள் இயக்கப்படும்.

சென்னை கே.கே.நகர் பஸ் நிலையத்தில் இருந்து இ.சி.ஆர். வழியாக கடலூர், சிதம்பரம் செல்லும் பஸ்கள் இயக்கப்படுகிறது.

தாம்பரம் அண்ணா (மெப்ஸ்) பஸ் நிலையத்தில் இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பஸ்கள் புறப்பட்டு செல்லும்.

தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, போளூர், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி செல்லும் பஸ்களும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பஸ்களும் புறப்படும்.

பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சீபுரம், செய்யாறு, ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி, திருப்பதி செல்லும் பஸ்கள் இயக்கப்படும்.

கோயம்பேடு எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் இருந்து மேற்கூறப்பட்ட ஊர்களைத் தவிர மற்ற அனைத்து ஊர்களுக்கும் (பெங்களூரு உள்பட) பஸ்கள் விடப்படும்.

காரில் செல்வோர்

முன்பதிவு செய்துள்ள பஸ்கள், கோயம்பேடு எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பூந்தமல்லி, நசரத்பேட்டை, வெளிச் சுற்றுச்சாலை வழியாக வண்டலூர் சென்றடைந்து ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தத்திற்கு சென்று, தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் இருந்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருக்கழுகுன்றம்-செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர்-செங்கல்பட்டு வழியாக செல்லலாம்.

இணையதள வசதி

பயணங்களை மேற்கொள்வோர் முன்பதிவு செய்வதற்கு வசதியாக கோயம்பேடு எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் 10 முன்பதிவு மையங்களிலும், தாம்பரம் மெப்ஸ் பஸ் நிலையத்தில் 2 மையங்களும் இயங்கும்.

முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான

www.tnstc.in, tnstc official app, www.redbus.in, www.paytm.com மற்றும் www.busindia.com போன்ற இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

ஆம்னி பஸ் மீது புகார்

பயணிகளின் வசதிக்காக 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை இயங்கும். பஸ்களின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் ஏதுவாக, 9445014450, 9445014436 ஆகிய தொலைபேசி எண்களை எப்போதும் தொடர்பு கொள்ளலாம்.

ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 044 24749002, 1800 425 6151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை பயணிகள் தொடர்பு கொள்ளலாம்.

பயணிகளின் நலன் கருதி கோயம்பேடு பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும்.

இணைப்பு பஸ்கள்

பஸ் நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள், பஸ் மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக 20 இடங்களில் தகவல் மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் இந்த பஸ் சேவையை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளலாம். பயணத்தின்போது முக கவசம் அணிய வேண்டும்.

பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் இருந்து மேற்கூறப்பட்ட 4 பஸ் நிலையங்களுக்கும் செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்து கழகத்தின் சார்பில் இணைப்பு பஸ்கள் 24 மணி நேரமும் இயக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story