மாநில தேர்தல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்ய நாராயணசாமி வலியுறுத்தல்


மாநில தேர்தல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்ய  நாராயணசாமி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 12 Oct 2021 6:08 PM GMT (Updated: 12 Oct 2021 6:08 PM GMT)

உள்ளாட்சி தேர்தலை ஐகோர்ட்டு 2 முறை தள்ளி வைத்துள்ளதற்கு பொறுப்பேற்று மாநில தேர்தல் ஆணையர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி
உள்ளாட்சி தேர்தலை ஐகோர்ட்டு 2 முறை தள்ளி வைத்துள்ளதற்கு பொறுப்பேற்று மாநில தேர்தல் ஆணையர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

உள்ளாட்சி தேர்தல்

புதுவை மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடந்து அதில் குளறுபடிகள் உள்ளது. பிறப்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் சிவா, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வேல்முருகன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது புதுவை மாநில அரசு வக்கீல் ஆஜராகி, பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கொடுப்பதை ரத்து செய்து அதற்கான கோப்பில் புதுச்சேரி முதல்-அமைச்சர் கையெழுத்திட்ட பின்னர் தான் நாங்கள் தேர்தலை அறிவித்தோம். பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை கொடுக்காமல் தேர்தலை நடத்துவது என முடிவு செய்து மேல்நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

தன்னிச்சையாக...

குறிப்பாக பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கொடுக்கவில்லை என்றால் அது சமூக நீதிக்கு எதிரானது. பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று இந்திய அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் ஏன் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு இல்லாமல் தேர்தலை நடத்தலாம் என உத்தரவிட்டார். இதற்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டும். புதுவை மக்கள் மத்தியில் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
தேர்தல் அறிவிப்புக்கு முன்பு அரசியல் கட்சிகளை கலந்து ஆலோசித்து மாநில தேர்தலை ஆணையம் உள்ளாட்சி தேர்தலை அறிவிக்க வேண்டும். இதேபோல் அனைத்து எம்.எல்.ஏ.க்களின் கருத்துக்களை கேட்டு தான் தேர்தல் அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை எல்லாமல் மாநில தேர்தல் ஆணையர் புறக்கணித்து விட்டார். அவர் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். 

ராஜினாமா

உள்ளாட்சி தேர்தல் 2 முறை தள்ளி வைத்ததற்கு பொறுப்பேற்று மாநில தேர்தல் ஆணையர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லை என்றால் மாநில அரசு அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர் கணக்கெடுப்பு மத்திய ஊரக வளர்ச்சி துறையிடம் உள்ளது. இதனை உடனடியாக மாநில அரசு பெற்று அதன் அடிப்படையில் தேர்தலை அறிவிக்க வேண்டும். இல்லை என்றால் 3 மாத காலத்திற்குள் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி தேர்தலை அறிவிக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு கொடுக்காமல் தேர்தலை நடத்த முயற்சி செய்தால் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்சி தெருவில் இறங்கி போராடும். நல்ல அனுபவம் உள்ள தேர்தல் அதிகாரியை வைத்து தேர்தல் நடத்தினால் நன்றாக இருக்கும். முதல்-அமைச்சர் உள்ளாட்சி தேர்தலில் கவனம் செலுத்த வேண்டும். அதிகாரிகள் கையில் நிர்வாகத்தை விட்டு விட்டு வேடிக்கை பார்க்க கூடாது.

விலைவாசி உயர்வு

மத்திய அரசின் தவறான கொள்கையால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், சமையில் எரிவாயு விலை உயர்ந்து கொண்டே வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102-க்கும், டீசல் ரூ.96-க்கும், கியாஸ் சிலிண்டர் ரூ.950-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதற்கு மக்கள் விரைவில் நரேந்திரமோடி அரசுக்கு பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story