காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி சொத்து மீட்பு


காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி சொத்து மீட்பு
x
தினத்தந்தி 13 Oct 2021 12:00 AM GMT (Updated: 12 Oct 2021 7:19 PM GMT)

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ரூ.250 கோடி சொத்து மீட்கப்பட்டது. இந்த இடம் அமைந்துள்ள கட்டிடத்துக்கு அமைச்சர் சேகர்பாபு ‘சீல்’ வைத்து நடவடிக்கை மேற்கொண்டார்.

சென்னை,

சென்னை கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி மதிப்பிலான 39 கிரவுண்டு இடம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டது. இந்த இடத்தில் உள்ள கட்டிடத்துக்கு நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கமிஷனர் குமரகுருபரன் முன்னிலையில் ‘சீல்’ வைக்கப்பட்டது.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தை பல்வேறு ஆக்கிரமிப்பாளர்கள் வாடகை செலுத்தாமல் பல ஆண்டுகளாக அனுபவித்து வருகின்றனர். முறையாக வாடகை செலுத்தாத நபர்களிடம் இருந்து இதுவரை 132 ‘கிரவுண்டு’ இடம் மீட்கப்பட்டுள்ளது. இந்த இடங்களின் மதிப்பு ரூ.250 கோடி ஆகும்.

மீட்கப்பட்ட இடத்தை அப்படியே விட்டுவிடாமல் கோவிலுக்கு வருவாய் தரக்கூடிய வகையில் திட்ட வரைபடம் தயாரிக்கப்பட்டு முதல்-அமைச்சரின் ஒப்புதலுடன் பணிகள் தொடங்கப்படும்.

4,500 புகார்கள்

பக்தர்களின் குறைகளை களைவதற்காக குறைகள் பதிவேடு துறை ஆரம்பித்தோம். இணையதளம் மூலம் குறைகளை மக்கள் தெரிவிக்க கடினமாக இருந்ததால், தொலைபேசி எண்ணை அறிவித்து அதன்மூலம், இதுவரை 4 ஆயிரத்து 500 புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்களை மண்டல வாரியாக பிரித்து அனுப்பி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. எச்.ராஜாவின் இந்து சமய அறநிலையத்துறை பற்றிய விமர்சனங்கள் கருத்தில் ஏற்றுக்கொள்ளப்படாது. அவர் மத்திய அரசின் பிரதிநிதி அல்ல.

சிறுவாபுரி முருகன் கோவிலில் செவ்வாய்க்கிழமை பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விஜயதசமி அன்று கோவில் திறப்பது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. கோர்ட்டின் தீர்ப்பின்படி இந்து சமய அறநிலைத்துறை நடவடிக்கை மேற்கொள்ளும். திருநீர்மலையில் ரோப் கார் அமைக்கும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. பணிகள் முடிந்தவுடன் விரைவில் பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அப்போது சென்னை மண்டல உதவி கமிஷனர் கவேனிதா, காஞ்சீபுரம் மண்டல உதவி கமிஷனர் ஜெயா, ஏகாம்பரநாதர் கோவில் செயல் அதிகாரி தியாகராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story