மாநில செய்திகள்

விடிய விடிய நடந்த வாக்கு எண்ணிக்கை: உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பின்னடைவு தி.மு.க. அமோக வெற்றி + "||" + Vidya Vidya polls: DMK loses in local body polls Amoka wins

விடிய விடிய நடந்த வாக்கு எண்ணிக்கை: உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பின்னடைவு தி.மு.க. அமோக வெற்றி

விடிய விடிய நடந்த வாக்கு எண்ணிக்கை: உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பின்னடைவு தி.மு.க. அமோக வெற்றி
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. வாக்கு சீட்டு முறை என்பதால் வாக்கு எண்ணிக்கை விடிய விடிய நடைபெற்றது.
சென்னை,

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் கடந்த 6 மற்றும் 9-ந் தேதிகளில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது.

ஊரக உள்ளாட்சி தேர்தல்

இதன்படி காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு கட்சி சார்பில் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டனர்.


இதுதவிர ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு சுயேச்சைகள் மட்டுமே போட்டியிட முடியும் என்பதால், அனைத்து வேட்பாளர்களும் சுயேச்சையாகவே போட்டியிட்டனர்.

ஓட்டு எண்ணிக்கை

சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலைப்போல ஊரக உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்த இயலாது. ஏனென்றால் ஒரு வாக்காளர் 4 பதவிகளுக்கு (மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர்) ஓட்டு போட வேண்டும் என்பதால், வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் அடங்கிய ஓட்டுப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.

தேர்தல் ஆணைய உத்தரவின்படி, நேற்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.

விடிய விடிய நடந்தது

தேர்தல் அலுவலர், வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் ஓட்டுப்பெட்டிகள் உள்ள அறையின் சீல் அகற்றப்பட்டு, ஓட்டு எண்ணும் பகுதிக்கு எடுத்து வரப்பட்டது.

பின்னர் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் ஓட்டுப்பெட்டியில் உள்ள ஓட்டுச்சீட்டுகள் பெரிய பெட்டி ஒன்றில் கொட்டப்பட்டது. பின்னர் அவற்றை 50-50 சீட்டுகளாக பிரித்து கட்டினர். உடனே அந்த கட்டுகளை பிரித்து மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஒன்றிய குழு உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் என சீட்டுகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டன.

வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடந்ததால் ஓட்டுகளை எண்ணுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான இடங்களில் விடிய விடிய ஓட்டு எண்ணிக்கை நடந்தது. அதன் பின்னர் வெற்றி பெற்றவர்களின் விவரம் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டன. சில இடங்களில் ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

தி.மு.க. அதிக இடங்களில் முன்னிலை

தேர்தல் நடந்த 9 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகிக்கிறார்கள். இதில் பல இடங்களில் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். 2-வது இடத்தையே அ.தி.மு.க. பெற்றுள்ளது.

இதேபோல் பல ஊராட்சிகளில் தி.மு.க. கூட்டணியின் ஆதரவு பெற்ற வேட்பாளர்களே வெற்றி வாகை சூடியுள்ளனர்.

காஞ்சீபுரம், செங்கல்பட்டு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு நடந்த தேர்தலில், 10 இடங்களில் தி.மு.க.வும், ஒரு இடத்தில் அ.தி.மு.க.வும் முன்னிலையில் உள்ளது.

இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 16 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு நடந்த தேர்தலில், 9 இடங்களில் தி.மு.க.வும், ஒரு இடத்தில் அ.தி.மு.க.வும் முன்னிலை வகித்தது.

ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவி இடங்களிலும் 2 மாவட்டங்களிலும் தி.மு.க.வுக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம்

28 உறுப்பினர்களை கொண்ட விழுப்புரம் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளில் தி.மு.க. அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஒரு இடத்தில் வெற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர தி.மு.க. 12 இடங்களிலும், அ.தி.மு.க. 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 293 ஒன்றிய குழு உறுப்பினர் பதவிகளில் 58 இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதில் 47 இடங்களை தி.மு.க. கைப்பற்றி உள்ளது. அ.தி.மு.க. 4 இடங்களிலும், பா.ம.க. 3 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 இடங்களிலும், சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளனர்.

கள்ளக்குறிச்சி

19 உறுப்பினர்களை கொண்ட கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவி இடங்களில் 2 இடங்களில் தி.மு.க. உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 17 இடங்களிலும் தி.மு.க. முன்னிலையில் உள்ளது.

180 ஒன்றிய குழு உறுப்பினர் பதவி இடங்களில் 3 தி.மு.க. உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 47 இடங்களில் தி.மு.க.வும், 6 இடங்களில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றுள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒரு இடத்திலும், சுயேச்சை 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இதுதவிர தி.மு.க. 32 இடங்களிலும், அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. தலா ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளது.

நெல்லை மாவட்டம்

12 உறுப்பினர்களை கொண்ட நெல்லை மாவட்ட பஞ்சாயத்தில், தி.மு.க. அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அந்த கட்சி 10 இடங்களிலும், காங்கிரஸ், பா.ஜனதா கட்சி தலா ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளது.

இதேபோல் நெல்லை மாவட்டத்தில் உள்ள 122 பஞ்சாயத்து யூனியன் வார்டுகளில் 40 வார்டுகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதில் 25 இடங்களை தி.மு.க. கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் கட்சி 4 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, அ.ம.மு.க. தலா ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 9 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளனர்.

தென்காசி மாவட்டம்

14 உறுப்பினர்களை கொண்ட தென்காசி மாவட்ட பஞ்சாயத்தில், 11 இடங்களில் தி.மு.க. முன்னிலையில் உள்ளது. ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ், ம.தி.மு.க. தலா ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது.

144 பஞ்சாயத்து யூனியன் வார்டுகளில் 51 இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தி.மு.க. 36 வார்டுகளிலும், அ.தி.மு.க., சுயேச்சைகள் தலா 5 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், ம.தி.மு.க. 3 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளன.

திருப்பத்தூர், ராணிப்பேட்டை

13 உறுப்பினர்களை கொண்ட திருப்பத்தூர் மாவட்ட பஞ்சாயத்தில் 13 இடங்களிலும் தி.மு.க. முன்னிலையில் உள்ளது. 124 ஒன்றிய குழு உறுப்பினர் பதவியில் 20 இடங்களில் தி.மு.க. முன்னிலையிலும், 9 இடங்களில் அ.தி.மு.க. முன்னிலையிலும், ஒரு இடத்தில் பா.ம.க.வும் உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 13 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவியில் 3 இடங்களில் தி.மு.க. முன்னிலையில் உள்ளது. 127 ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவியில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். இதில் 6 இடங்களில் தி.மு.க.வும், பா.ம.க. ஒரு இடத்திலும், சுயேச்சை வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெற்று உள்ளனர்.

வேலூர்

14 உறுப்பினர்களை கொண்ட வேலூர் மாவட்ட பஞ்சாயத்தில் 8 இடங்களில் தி.மு.க. முன்னிலையில் உள்ளது. கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியத்தில் முடிவு எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஒரு இடத்தில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.

மாவட்டத்தில் தேர்தல் நடைபெற்ற 136 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் 10 இடங்களில் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பாலான இடங்களில் தி.மு.க. முன்னிலையில் உள்ளது.

மாவட்ட ஊராட்சிகளை தி.மு.க. கைப்பற்றுகிறது

9 மாவட்டங்களிலும் விடிய விடிய ஓட்டு எண்ணிக்கை நடந்ததால், முழுதேர்தல் முடிவும் நேற்று வெளியாகவில்லை. மொத்த முன்னணி நிலவரம் மற்றும் வெற்றி விவரத்தை பார்க்கும்போது, 9 மாவட்ட ஊராட்சிகளையும் தி.மு.க.வே கைப்பற்றும் நிலை உள்ளது.

இதேபோல் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியே பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் நிலையில் உள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. ஒன்றிரண்டு இடங்களை மட்டுமே பெற்றுள்ளன. மற்ற கட்சிகளுக்கும் இதேநிலைதான்.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

9 மாவட்டங்களை தவிர்த்து ஏனைய 28 மாவட்டங்களில் காலியாக இருந்த 13 மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 40 ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர், 106 ஊராட்சி தலைவர், 630 ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 789 பதவி இடங்களுக்கு நடந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நேற்று நடந்தது.

இதிலும் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. கூட்டணியே முன்னிலை வகித்தது.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானின் வெற்றியை காஷ்மீரிகள் கொண்டாடினால் ஏன் இவ்வளவு கோபம்? - மெகபூபா கேள்வி
பாகிஸ்தான் அணிக்கு வாழ்த்து தெரிவித்த கோலியைப் போல, ஏற்கும் மனநிலையை வளர்ப்போம் என்று மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
2. டி20 உலக கோப்பை; ஆப்கானிஸ்தான் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
டி20 உலக கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
3. டி20 உலக கோப்பை; பாகிஸ்தான் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளது.
4. ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல்: பெரும்பாலான இடங்களில் தி.மு.க. வெற்றி
9 மாவட்டங்களில் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றது. 9 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளையும் அந்த கட்சி கைப்பற்றியது.
5. ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க.வினருக்கு மோடி தமிழில் வாழ்த்து
ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக பா.ஜ.க.வினருக்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அருமையான தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைப்போம் என்று தெரிவித்துள்ளார்.