தேர்தல் நடத்தை விதிகளை ரத்துசெய்ய வேண்டும் மாநில தேர்தல் ஆணையரிடம், எம்.எல்.ஏ.க்கள் மனு


தேர்தல் நடத்தை விதிகளை ரத்துசெய்ய வேண்டும் மாநில தேர்தல் ஆணையரிடம், எம்.எல்.ஏ.க்கள் மனு
x
தினத்தந்தி 13 Oct 2021 4:21 PM GMT (Updated: 13 Oct 2021 4:21 PM GMT)

தேர்தல் நடத்தை விதிகளை ரத்துசெய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையரிடம், எம்.எல்.ஏ.க்கள் மனு அளித்துள்ளனர்.

புதுச்சேரி
தேர்தல் நடத்தை விதிகளை ரத்துசெய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையரிடம், எம்.எல்.ஏ.க்கள் மனு அளித்துள்ளனர்.

உள்ளாட்சி தேர்தல்

புதுவையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் முதலில் வெளியிட்ட தேர்தல் அறிவிப்பில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டிருந்தது. இடஒதுக்கீட்டில் குழப்பம் இருப்பதாக சுயேச்சை எம்.எல்.ஏ. பிரகாஷ்குமார் வழக்கு தொடர்ந்ததை தொடர்ந்து ஐகோர்ட்டு அனுமதியின்பேரில் தேர்தல் அறிவிப்பினை மாநில தேர்தல் ஆணையம் திரும்பப்பெற்றது.
அதன்பின் மீண்டும் தேர்தல் அட்டவணையை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. இந்த தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர்   மற்றும்  பழங் குடியினருக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. இடஒதுக்கீட்டை திரும்பப்பெற்றது தொடர்பாக தி.மு.க. அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சிவா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

காலஅவகாசம்

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. இதன் காரணமாக வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையிலேயே தேர்தல் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த நிலையில் தேர்தலை நடத்த மேலும் 4 மாத காலஅவகாசம் அளிக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கல்யாணசுந்தரம்,   நேரு,    வைத்திய நாதன்,     செந்தில்குமார், ரிச்சர்ட், கே.எஸ்.பி.ரமேஷ், பி.ஆர்.சிவா,      பாஸ்கர், லட்சுமிகாந்தன் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக், பிரகாஷ்குமார், அசோக்பாபு, வெங்கடேசன் ஆகியோர் மாநில தேர்தல் ஆணையர் ராய் பி.தாமசை சந்தித்து பேசினார்கள். அப்போது அவரிடம் மனு ஒன்றை அளித்தனர்.

ரத்துசெய்ய வேண்டும்

அந்த மனுவில் தொடர்ச்சியாக மக்கள் நல பணிகள் முடங்கி உள்ளதாகவும், அடுத்ததாக பண்டிகை நாட்கள் வருவதால் தேர்தல் நடத்தை விதிகளை ரத்துசெய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி உரிய முடிவை  அறிவிப்பதாக மாநில தேர்தல் ஆணையர் ராய் பி.தாமஸ் தெரிவித்தார்.

Next Story