ஊராட்சி தலைவரான 21 வயது பெண் என்ஜினீயர்


ஊராட்சி தலைவரான 21 வயது பெண் என்ஜினீயர்
x
தினத்தந்தி 13 Oct 2021 8:26 PM GMT (Updated: 13 Oct 2021 8:26 PM GMT)

தென்காசியில் சாருகலா என்ற 21 வயது பெண் என்ஜினீயர் ஊராட்சி தலைவராக வெற்றி பெற்றார். தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதே தன்னுடைய முதல் லட்சியம் என்று அவர் தெரிவித்தார்.

தென்காசி,

தமிழகத்திலே உள்ளாட்சி தேர்தலில் இளம் ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் 21 வயதே ஆன சாருகலா. இதன்மூலம் ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையையும், தென் பொதிகை பக்கம் திருப்பியுள்ளார். இவர் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி ஆவார்.

தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் முதல் முறையாக நின்று வெற்றி வாகை சூடியிருக்கிறார். இந்த வெற்றி அவருக்கு எளிதாக கிடைத்திடவில்லை. அர்ப்பணிப்புடன் கூடிய அவரின் களப்பணி அவரை அந்த ஊராட்சி தலைவராக்கி பெருமைப்படுத்தியிருக்கிறது. தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 5 பேர் போட்டியிட்டனர். ஊராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதுமே தேர்தல் களம் இங்கே களை கட்டியது. இதுவரை வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக ஒரே ஒருவர் 15 ஆண்டுகாலமாக இருந்து வந்துள்ள நிலையில், அதனை மாணவி சாருகலா தகர்த்து, சாதனை படைத்துள்ளார்.

கல்லூரி மாணவி

செல்லத்தக்க 6,362 வாக்குகளில் வெங்கடாம்பட்டி ஊராட்சி லட்சுமியூரை சேர்ந்த சாருகலா 3,336 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ரேவதி முத்து வடிவு என்பவரை 796 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். மேலும் மற்ற வேட்பாளர்கள் தங்க சக்திகனிமா, மகேஷ்வரி, மணிமேகலா ஆகியோர் டெபாசிட் இழந்தனர்.

ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றுள்ள சாருகலா கோவையில் என்ஜினீயரிங் கல்லூரியில் முதுகலை பொறியியல் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தனது வெற்றி குறித்தும், தன்னுடைய முதல் பணி குறித்தும் சென்னை தினத்தந்தி நிருபரிடம் தொலைபேசி வாயிலாக பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:-

தண்ணீர் பிரச்சினை

கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் வெங்கடாம்பட்டி ஊராட்சியில் தண்ணீர் பஞ்சம் அதிகம். ஏழை, விவசாயிகளும் இங்கு தான் அதிகமாக இருக்கிறார்கள். தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பது தான் என் முதல் வேலை. என்னுடைய தேர்தல் பிரசாரத்திலும் இதை தான் முன்வைத்தேன். தண்ணீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் கலெக்டரை சந்தித்து பேசுவேன். தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீரை பெற்று தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன். மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தை எங்கள் ஊராட்சியில் அமல்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.

இந்த ஊராட்சியில் 15 ஆண்டுகாலமாக தலைவராக இருந்தவர்கள் எந்த அடிப்படை பணியையும் செய்யவில்லை. தெரு விளக்கு இல்லை. கழிவுநீர் கால்வாய் இல்லை. சாலை வசதி இல்லை. இது போன்ற பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுப்பேன். அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் இதை செய்து காட்டுவேன்.

நான் என்ஜினீயரிங் கல்லூரி மாணவியாக இருந்தாலும் படிப்புக்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் எனது சமுதாய கடமையை நிறைவேற்றுவேன். கல்லூரியில் படித்துக்கொண்டே மக்கள் பணியை செவ்வனே செய்வேன். மத்திய, மாநில அரசின் கல்வி உதவித்தொகை குறித்து போதிய அளவு விழிப்புணர்வு இல்லாத மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் தேவையான உதவிகளை செய்து, கல்வி உதவி தொகையை பெற்று தருவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மக்களின் மகள்

சிறிய வயதிலே பொதுப்பணிக்கு வந்து இருக்கிறீர்களே? தேர்தல், பிரசாரம், வெற்றி, தோல்வி குறித்து பயம் ஏதாவது இருந்ததா? என்று கேட்டதற்கு, ‘பயம் எதுவும் இல்லை. தண்ணீர் பிரச்சினை தான் என் கண் முன்னே நின்றது. பிரசாரத்திற்கு சென்ற இடமெல்லாம் மக்கள் என்னை தங்கள் மகள் போல் பார்த்தார்கள், வெற்றி அதை உறுதி செய்து விட்டது. எனவே நான் மக்களின் மகள்' என்று பூரிப்புடன் கூறுகிறார், சாருகலா.

இவரது தந்தை ரவி சுப்பிரமணியன் சொந்தமாக செங்கல் சூளை மற்றும் விவசாயம் செய்து வருகிறார். இவரது தாய் சாந்தி பூலாங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 19 வயதில் சந்துரு என்ற தம்பி உள்ளார். தமிழகத்தில் மிகவும் குறைந்த வயதில் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றிபெற்றுள்ள சாருகலாவிற்கு அனைத்து தரப்பிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

Next Story