தொடர் விடுமுறை காரணமாக: சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை உயர்வு


தொடர் விடுமுறை காரணமாக: சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை உயர்வு
x
தினத்தந்தி 13 Oct 2021 8:44 PM GMT (Updated: 13 Oct 2021 8:44 PM GMT)

தொடர் விடுமுறை காரணமாக சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது.

ஆலந்தூர்,

தமிழகத்தில் ஆயுத பூஜை பண்டிகை மற்றும் மிலாதுநபியை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) முதல் தொடா்ந்து விடுமுறை வருவதால் சென்னையில் வசிப்பவர்கள், தங்கள் சொந்த ஊா்களுக்கு செல்கின்றனர். இதனால் பஸ், ரெயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. கொரோனா 2-வது அலை பெருமளவு குறைந்து வருவதால் பொதுமக்கள் கூடுதல் உற்சாகத்துடன் தங்களுடைய பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

பஸ், ரெயில்களில் முன்பதிவு டிக்கெட் கிடைக்காத பயணிகள், விமான பயணங்களை மேற்கொள்கின்றனா். இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. நேற்று முன்தினம் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து 190 விமானங்கள் இயக்கப்பட்டு, 15 ஆயிரம் பேர் பயணம் செய்தனர்.

ஆனால் நேற்று 213 விமான சேவைகளாக அதிகரித்து புறப்பாடு மற்றும் வருகை பகுதியில் பயணிகள் எண்ணிக்கை 20 ஆயிரமாக அதிகரித்து உள்ளது. ஒரே நாளில் 23 விமானங்களும், 5 ஆயிரம் பயணிகளும் அதிகரித்து உள்ளது. இன்று, பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டணம் அதிகரிப்பு

அதேநேரம் உள்நாட்டு விமான கட்டணங்களின் திடீா் உயா்வு, பயணிகளை அதிா்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல வழக்கமாக ரூ.4,500 ஆக இருந்த கட்டணம், தற்போது ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.7,500 ஆக அதிகரித்து உள்ளது.

ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் சென்னை-தூத்துக்குடி விமான கட்டணம் ரூ.3,500 ஆகத்தான் இருந்தது. ஆனால் விமான நிறுவனங்கள் நஷ்டத்தில் உள்ளதாக கூறி 2 முறை கட்டண உயா்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதனால் தான் தூத்துக்குடிக்கு ரூ.3,500 ஆக இருந்த குறைந்தபட்ச கட்டணம் ரூ.4,500 ஆக மாறியது. சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, கோவை, திருவனந்தபுரம், பெங்களூரு செல்லும் பயணிகள் கட்டணமும் அதிகரித்துள்ளது.

விமான நிறுவனங்கள் மறுப்பு

விமான நிறுவனங்கள், பயணிகள் கூட்டம் அதிகரிக்கும்போது, விமான கட்டணத்தை அதிகரித்து விடுவதாக விமான பயணிகள் தரப்பில் கூறுகின்றனா்.

முதலில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு குறைந்த கட்டண டிக்கெட்டும், அதன்பின்பு வருபவா்களுக்கு படிப்படியாக கட்டணம் அதிகரிக்கும். இதுதான் நடைமுறையில் உள்ளது” என்று விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Next Story