‘நீட்’ மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்: கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


‘நீட்’ மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்: கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 14 Oct 2021 12:13 AM GMT (Updated: 14 Oct 2021 12:13 AM GMT)

‘நீட்’ மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கவர்னரை சந்தித்து மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

சென்னை,

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

ஒருமனதாக நிறைவேறியது

தமிழக சட்டசபையில் கடந்த மாதம் (செப்டம்பர்) 13-ந்தேதி ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வழங்க வகை செய்யும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பின்னர், கவர்னரின் ஒப்புதலுக்காகவும் அனுப்பிவைக்கப்பட்டது.

அந்த நேரத்தில்தான், தமிழக கவர்னர் பதவியில் இருந்து பன்வாரிலால் புரோகித் விடைபெற்று, புதிய கவர்னராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றார். இதற்கிடையே 12 மாநில முதல்-மந்திரிகளுக்கு ‘நீட்’ தேர்வுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். அதில், “இந்த முக்கியமான பிரச்சினையில் அனைவரது ஒத்துழைப்பையும் நான் எதிர்நோக்குகிறேன்” என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

கவர்னருடன் ‘திடீர்’ சந்திப்பு

இந்த நிலையில், கவர்னருக்கு மசோதாவை அனுப்பி ஒரு மாதம் ஆன போதும், இன்னும் பதில் வராத நிலையில், நேற்று திடீரென கவர்னர் ஆர்.என்.ரவியை சந்திக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்றார்.

மாலை 5 மணிக்கு இந்த சந்திப்பு நடந்தது. அப்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, முதல்-அமைச்சரின் தனிச் செயலாளர் உதயசந்திரன் ஆகியோர் இருந்தனர்.

மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

20 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில், ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கவர்னர் ஆர்.என்.ரவியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

மேலும், தமிழகத்தில் கொரோனா தடுப்புக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை அவர் விளக்கி கூறினார். ஊரடங்கு தளர்வுகள் குறித்தும் பேசப்பட்டதாக தெரிகிறது.

Next Story