கோவில்கள் திறப்பு: மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும் - அமைச்சர் சேகர்பாபு


கோவில்கள் திறப்பு: மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும் - அமைச்சர் சேகர்பாபு
x
தினத்தந்தி 14 Oct 2021 5:11 PM GMT (Updated: 14 Oct 2021 5:11 PM GMT)

மத்திய அரசின் வழிகாட்டுதல்படி கோவில்களில் முகக்கவசம், கிருமி நாசினி, சமூக இடைவெளி குறித்து அறிவுறுத்தல் வழங்கப்படும என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.  தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்து வந்தது.


அதனால் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.  இந்த நிலையில் மேலும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு இன்று அறிவித்தது. அதன்படி   தமிழகத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், அனைத்து நாட்களிலும் கோயில்கள் வழிபாட்டிற்கு திறக்கப்படும் எனும் அறிவிப்பை எந்த ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு கிடைத்த வெற்றியாக பார்க்க முடியாது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை மண்ணடியில் உள்ள ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோயிலில் இந்து சமைய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். 

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 

“முதலமைச்சர் வழிகாட்டுதல்படி இன்று முதல் அனைத்து நாட்களிலும் கோயில்களில் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். அதே வேளையில், முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மத்திய அரசின் வழிகாட்டுதல்படி தேவையான முகக்கவசம், கிருமி நாசினி, சமூக இடைவெளி குறித்து அறிவுறுத்தல் வழங்கப்படும். அதே நேரம், அர்ச்சனை, பூ, மாலை பழம் வைத்து பக்தர்கள் பூஜை செய்ய அனுமதி கிடையாது.

அனைத்து நாட்களிலும் கோயில்களை வழிபாட்டிற்கு திறப்பதாக வெளியிடப்பட்ட முடிவை எந்த ஒரு குறிப்பிட்ட கட்சிக்கும் கிடைத்த வெற்றியாக பார்க்க முடியாது. மக்களின் கோரிக்கைகளை, பக்தர்களின் கோரிக்கைகளை ஏற்றே முதலமைச்சர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்புக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், நேரடியாகவும் எராளமான பொதுமக்கள் வாழ்த்து தெரிவிக்கின்றனர்”

இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Next Story