மாநில செய்திகள்

சேத்துப்பட்டு தனியார் நிறுவனத்தில் ரூ.72 லட்சம் கொள்ளை போன வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் மகன் கைது + "||" + Ex-serviceman's son arrested in Rs 72 lakh robbery case

சேத்துப்பட்டு தனியார் நிறுவனத்தில் ரூ.72 லட்சம் கொள்ளை போன வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் மகன் கைது

சேத்துப்பட்டு தனியார் நிறுவனத்தில் ரூ.72 லட்சம் கொள்ளை போன வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் மகன் கைது
சென்னை சேத்துப்பட்டு தனியார் நிறுவன அலுவலகத்தில் ரூ.72 லட்சம் கொள்ளை போன வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் மகன் கைது செய்யப்பட்டார். அவர் கொள்ளை தொழிலுக்கு வந்தது குறித்து போலீசாரிடம் பரபரப்பான வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
சென்னை,

சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் அமைந்துள்ள பிரபல வணிக வளாகத்தின் 4-வது மாடியில் தனியார் நிறுவனத்தின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் கண்ணாடி கதவை ஸ்குரு டிரைவர் மூலம் கழற்றி எடுத்து திறந்து, அலுவலகத்தின் பீரோவில் இருந்த ரூ.72 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது. கடந்த 10-ந் தேதி நடந்த இந்த துணிகர கொள்ளை வழக்கில் சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.


சம்பவம் நடந்த தனியார் நிறுவனத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், குரங்கு குல்லா அணிந்து முகத்தை மறைத்த கொள்ளையன் ஒருவர்தான் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர்.

அந்த கொள்ளையன் பீரோவில் இருந்த ரூ.72 லட்சத்தை ஒரு பெரிய பையில் போட்டு எடுத்துக்கொண்டு படிக்கட்டு வழியாக கீழேஇறங்கி வருகிறார். பின்னர் ஹாரிங்டன் சாலைக்கு வந்து, குரங்கு குல்லாவையும், தான் அணிந்திருந்த சட்டையையும் கழற்றி வீசி எறிந்து விடுகிறார். புதிய சட்டை ஒன்றை அணிந்து கொண்டு, பணம் உள்ள பையுடன் நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலை பக்கம் நடந்து செல்கிறார்.

திருவல்லிக்கேணி லாட்ஜில்....

அங்கிருந்து ஆட்டோ பிடித்து திருவல்லிக்கேணி சென்று அங்குள்ள லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்குகிறார். அங்கு 11-ந் தேதி மட்டும் தங்கி இருக்கிறார். பின்னர் அங்கிருந்து தங்கும் இடத்தை மாற்றுகிறார். இதுவரை கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார் குற்றவாளியின் நடமாட்டத்தை கண்டுபிடித்தனர். திருவல்லிக்கேணியில் இருந்து அடுத்து கொள்ளையன் எங்கு சென்றார்? என்பதை, லாட்ஜில் அவர் கொடுத்த செல்போன் நம்பரை வைத்து, அடுத்து அவர் சென்ற இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.

திருவல்லிக்கேணியில் இருந்து வாடகை கார் மூலம் தியாகராயநகர் வந்த கொள்ளையன், அங்குள்ள பெரிய நட்சத்திர ஓட்டலில் தங்கி இருப்பதை கண்டுபிடித்தனர். நட்சத்திர ஓட்டலில் வைத்து போலீசார் கொள்ளை ஆசாமியை துப்பாக்கி முனையில் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

சினிமா காட்சியை மிஞ்சும் வகையில் போலீசார் 3 நாட்கள் இரவு-பகலாக தூங்காமல் செயல்பட்டு கொள்ளை ஆசாமியை மடக்கிப்பிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.60.70 லட்சத்தை பத்திரமாக மீட்டனர். மீதி பணத்தில் ரூ.2½ லட்சத்தை தனது குடும்பத்தினர் செலவுக்கு அனுப்பி வைத்துள்ளார். சென்னையில் சொந்தமாக வீடு வாங்க ஒரு தொகையை அட்வான்சாக கொடுத்து உள்ளதாக தெரிகிறது.

வாக்குமூலம்

கைது செய்யப்பட்ட கொள்ளை ஆசாமியின் பெயர் பாண்டுரங்கன் (வயது 57). இவர் நெல்லை மாவட்டம், பிள்ளையார் நத்தம் கிராமத்தைச்சேர்ந்தவர். இவர் மீது 21 வழக்குகள் பதிவாகி உள்ளது. 14 வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் இருந்துள்ளார். இவரது தந்தை ராணுவ வீரர். அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்று இறந்து விட்டார். கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்த இவர், கொள்ளை தொழிலில் ஈடுபட்டது பற்றி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

நானும், எனது தந்தையைப்போல ராணுவத்தில் சேர்ந்து தேசத்துக்கு தொண்டு செய்ய ஆசைப்பட்டேன். ஆனால் நான் 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்து விட்டேன். இருந்தாலும் எப்படியும் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற துடிப்பில், 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றது போல, போலியான ஆவணத்தை தயார் செய்தேன். ஆனால் ராணுவத்தில் சேர்வதற்கு நடந்த போட்டியில் நான் பங்கேற்றபோது, எனது 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் போலியானது என்பதை அதிகாரிகள் கண்டு பிடித்து விட்டனர்.

சிறைக்கு சென்றேன்

அதற்காக போலீசார் என்னை கைது செய்து, கோர்ட்டு மூலம் தண்டனை வாங்கி கொடுத்து சிறைக்கு அனுப்பி விட்டனர். சிறையில் குமார் என்பவரை சந்தித்தேன். அவர் எனக்கு திருடும் தொழில் பற்றி பயிற்சி கொடுத்தார். பெரிய அலுவலகங்களில் மட்டுமே திருடுவதற்கு அவர் பயிற்சி கொடுத்தார். வீடுகளில் திருடக்கூடாது என்பது அவர் எனக்கு கற்றுக்கொடுத்த பாடமாக இருந்தது. அவர்தான் எனக்கு ஆசான். அவர் சொன்னபடி அலுவலகங்களில் மட்டும் திருடி வந்தேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விருதுநகர் கோர்ட்டில் ரூ.28 லட்சம் கையாடல்
விருதுநகர் கோர்ட்டில் ரூ.28 லட்சம் கையாடல் செய்ததாக நீதிபதி அளித்த புகாரின்பேரில் முன்னாள் ஊழியர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2. தேர்தலில் ‘சீட்’ வாங்கி தருவதாக பா.ஜ.க. பிரமுகரிடம் ரூ.50 லட்சம் மோசடி
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பா.ஜ.க. பிரமுகரிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்த வழக்கில் மத்திய இணை மந்திரி கிஷன் ரெட்டியின் முன்னாள் உதவியாளர் நரோத்தமன் தந்தையுடன் கைது செய்யப்பட்டார்.
3. பிரபல சின்னத்திரை நடிகை வீட்டில் கொள்ளை - போலீஸ் விசாரணை
கேரளாவில் பிரபல சின்னத்திரை நடிகை வீட்டில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளை நடந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. படப்பை அருகே தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
படப்பை அருகே 1½ ஆண்டுகளாக 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பலே கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
5. லிப்ட் கேட்டு ,வாலிபரை தாக்கி கூகுள் பே மூலம் பணத்தை பறித்த கொள்ளையர்கள்
ஆவடி அருகே லிப்ட் கேட்பது போல் நடித்து வாலிபரை தாக்கி கூகுள் பே மூலம் பணத்தை பறித்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.