மாநில செய்திகள்

‘இனி உள்ளாட்சி எங்கும் நல்லாட்சி ஒளிரும்’ மக்கள் சேவகர்களாக எந்நாளும் உழைக்க வேண்டும் + "||" + We must work day in and day out as public servants to ‘shine good governance everywhere’

‘இனி உள்ளாட்சி எங்கும் நல்லாட்சி ஒளிரும்’ மக்கள் சேவகர்களாக எந்நாளும் உழைக்க வேண்டும்

‘இனி உள்ளாட்சி எங்கும் நல்லாட்சி ஒளிரும்’ மக்கள் சேவகர்களாக எந்நாளும் உழைக்க வேண்டும்
இனி உள்ளாட்சி எங்கும் நல்லாட்சி மலரும். தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க.வினர் மக்கள் சேவகர்களாக எந்நாளும் உழைத்திட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.
சென்னை,

முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் அக்கட்சி தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடித வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டு மக்கள் தங்களின் நலன் காக்கும் நம்பிக்கை இயக்கமான தி.மு.க.வின் மீது பாசமும், பற்றும் கொண்டு, 2019 நாடாளுமன்ற தேர்தலில் நாடே வியக்கும் மகத்தான வெற்றியையும், 2021 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் கூடிய பெருமிதமிக்க வெற்றியையும் வழங்கியதை போலவே 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் வரலாறு போற்றும் மிகப்பெரும் வெற்றியை வழங்கியிருக்கிறார்கள்.


தி.மு.க. வெற்றி குவிப்பு

கடந்த ஆட்சியில், மாவட்ட எல்லைகள் அவை சார்ந்த ஊராட்சி அமைப்புகளுக்கான எல்லைகளை வரையறை செய்வதில் ஏற்பட்ட காலதாமதத்தால் தேர்தல் நடைபெறாமல் இருந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஆக்கப்பணிகள் தி.மு.க. அரசால் மேற்கொள்ளப்பட்டு, மாநில தேர்தல் ஆணையத்தால் கடந்த அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

140 மாவட்ட உறுப்பினர் (கவுன்சிலர்) பதவிகளில் 138 இடங்களில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதன்மூலம் 9 மாவட்ட ஊராட்சித் தலைவர் பொறுப்பினையும் தி.மு.க. அணியே பெறுகின்ற வாய்ப்பினை மக்கள் வழங்கியுள்ளனர். அது போலவே, 1,381 ஊராட்சி ஒன்றிய உறுப்பினருக்கான இடங்களிலும் 1,000 இடங்களுக்கும் கூடுதலாக தி.மு.க. அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 74 ஊராட்சி ஒன்றியத்தலைவர் பொறுப்புகளில் 73 பொறுப்புகள் தி.மு.க அணியின் வசமாகியுள்ளன. இடைத்தேர்தல் நடைபெற்ற பகுதிகளிலும் தி.மு.க. வெற்றியை குவித்துள்ளது.

பொற்சான்றிதழ்

உங்களில் ஒருவனான இந்த “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” தலைமையிலான அரசின் 5 மாத கால ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு தமிழ்நாட்டு மக்கள் மனப்பூர்வமாக வழங்கியுள்ள நற்சான்றிதழ்தான், பொற்சான்றிதழ்தான் இந்த மகத்தான வெற்றி.

நாள்தோறும் திட்டங்கள், துறைதோறும் முழு வீச்சிலான செயல்பாடுகள் என தமிழ்நாட்டின் இருண்ட காலத்தை விரட்டி அடிக்கும் உதயசூரியனாக தி.மு.க. ஆட்சி ஒளி வீசுகிறது.

உள்ளாட்சி நிர்வாகத்தை ஊழல் நிர்வாகமாக சீரழித்த முந்தைய ஆட்சியாளர்கள் நம் மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகளை மக்கள் புறங்கையால் தள்ளி, தி.மு.க.வுக்கு கிட்டத்தட்ட 100 சதவீத வெற்றியை தந்திருக்கிறார்கள். ஓர் எதிர்க்கட்சிக்குரிய குறைந்தபட்ச அளவிலான வெற்றியைக்கூட அவர்களுக்கு தருவதற்கு மக்கள் முன்வரவில்லை, மனமிரங்கவில்லை.

பதவியல்ல, பொறுப்பு

உள்ளாட்சி அமைப்புகளே ஜனநாயகத்தின் அடித்தளம், ஆணிவேர். அவை வலிமையாக இருக்க வேண்டும் என்பதை தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் கவனத்தில் கொண்டு செயலாற்றி இருக்கிறது.

தி.மு.க.வின் சார்பில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித்தேர்தலில் வெற்றிபெற்ற அனைவரும், மக்களின் நியாயமான கோரிக்கைகளையும் அவர்களின் அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றக்கூடிய மக்கள் பிரதிநிதிகளாக, மக்கள் சேவகர்களாக எந்நாளும் உழைத்திட, ஊழியம் புரிந்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னையின் முதல் மேயர் என்ற பெருமையை 1996-ல் நடந்த மாநகராட்சி தேர்தலில் சென்னைவாழ் மக்கள் எனக்கு வழங்கியபோது, கருணாநிதி சொன்னது இன்றுவரை என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. “இது பதவியல்ல, பொறுப்பு” என்பதுதான். நம் உயிர்நிகர் தலைவர் சொன்ன வைர வரிகள். அதனை நெஞ்சில் பதிய வைத்து, தொடர்ந்து உழைத்து வரும் உங்களில் ஒருவனான நான், இன்று முதல்-அமைச்சர் என்பதை பதவியாக கருதாமல் பொறுப்பு என்றே கருதுகிறேன்.

நல்லாட்சி ஒளிரும்

ஜனநாயகத்தில் மக்கள்தான் நமக்கு எஜமானர்கள். நாம் அவர்களுக்கு தொண்டு செய்ய வேண்டியவர்கள் என்பதை எந்நாளும், எப்போதும் நெஞ்சில் கொண்டு செயலாற்றிட வாழ்த்துகிறேன். 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி களத்தில் உதித்தெழுந்த ஜனநாயக சூரியன், விரைவில் நடைபெறவிருக்கும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் களத்திலும் உதித்திட வேண்டும். மக்கள் நம் பக்கம். நாம் மக்களின் பக்கம். அதற்கேற்ப நமது செயல்பாடுகள், மக்கள் நலன் காக்கும் வகையில் தொடர்ந்திடும். இனி உள்ளாட்சி எங்கும் நல்லாட்சி ஒளிரும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து 12 மினி பஸ்கள் இயக்கம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு மாநகர் போக்குவரத்துக்கழகத்தின் 12 இணைப்பு மினி பஸ்கள் இயக்கத்தை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
2. கனமழையால் பாதிக்கப்பட்ட: காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
கனமழையால் பாதிக்கப்பட்ட காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டார்.
3. 12,959 கோவில்களில் ஒரு கால பூஜைக்காக ரூ.129½ கோடி முதலீடு - மு.க.ஸ்டாலின் காசோலை வழங்கினார்
12,959 கோவில்களில் ஒரு கால பூஜை செய்ய ஏதுவாக மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் ரூ.129 கோடியே 59 லட்சம் வைப்பு நிதியாக முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான காசோலையை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
4. மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து மினி பஸ் சேவை: மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
சென்னை, மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து 12 மினி பஸ்கள் சேவையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
5. கனமழையால் பாதிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டதுடன், பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.