போராட்டம் நடத்தும் நர்சுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி


போராட்டம் நடத்தும் நர்சுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
x
தினத்தந்தி 15 Oct 2021 11:48 PM GMT (Updated: 15 Oct 2021 11:48 PM GMT)

தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நர்சுகளுடன் கலந்து பேசி 15 நாட்களில் தீர்வு காண 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை,

சென்னையில் நேற்று நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில், முதல்-அமைச்சர் ஒவ்வொரு முறை கொரோனா தளர்வுகள் அறிவிக்கிறபோதும் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தத் தவறுவதில்லை. முககவசம் அணிவதில் தொடங்கி கொரோனா காலத்து விதிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தி வருகிறார். இவற்றையெல்லாம் கடந்து மக்களும் சுயக்கட்டுப்பாடுகளுடன் அவசியம் விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். தளர்வுகளை அறிவித்துள்ளது என்பதற்காக விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டுவிடக்கூடாது.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்த நர்சுகள் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள். 3 பேர் கொண்ட குழு அமைத்து நர்சுகளுடன் கலந்துபேசி 15 நாட்களில் தீர்வுகாண வலியுறுத்தப்பட்டுள்ளது. போராட்டம் நடத்தியதற்கு வருத்தமும் நர்சுகள் தெரிவித்திருக்கிறார்கள். தமிழகத்தில் 4 ஆயிரத்து 900 நர்சுகளை புதியதாக எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த நர்சுகளில் இவர்களுக்கும் முன்னுரிமை கொடுப்பதற்கு தெரிவித்திருக்கிறோம்.

10 நாட்களில்...

இந்திய அளவில் தமிழகம் தடுப்பூசி போடுவதில் தற்போது 9 இடத்தில் இருக்கிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஜனவரி 16-ந்தேதி தொடங்கப்பட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணிகள், சரியாக நடைபெறவில்லை. மே-6 வரை சராசரியாக 61 ஆயிரத்து 441 பேருக்கு தான் தடுப்பூசி போடப்பட்டது. மேலும் அதிலும் தடுப்பூசிகளை வீணடித்த மாநிலத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்தது. 6 சதவிகிதம் அளவிற்கு 4 லட்சத்து 34 ஆயிரம் தடுப்பூசிகளை வீணடித்துள்ளனர்.

ஆனால் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தீவிர நடவடிக்கைகளுக்கு பின்னர் தற்போது 5 கோடியே 29 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் இதுவரை 67 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்னும் 10 நாட்களில் 70 சதவிகிதம் என்ற இலக்கினை அடைய இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்வில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பால்வளத்துறை அமைச்சர் ச.மு.நாசர், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஜெ.கருணாநிதி, மயிலை த.வேலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Next Story