மு.க.ஸ்டாலின் உத்தரவை தொடர்ந்து எல்லா நாளும் வழிபாட்டுத்தலங்கள் திறப்பு


மு.க.ஸ்டாலின் உத்தரவை தொடர்ந்து எல்லா நாளும் வழிபாட்டுத்தலங்கள் திறப்பு
x
தினத்தந்தி 16 Oct 2021 12:28 AM GMT (Updated: 16 Oct 2021 12:28 AM GMT)

கொரோனா பரவல் குறைந்த நிலையில் எல்லா நாட்களும் கோவில்களை திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டதால் நேற்று அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டன. அரசின் அறிவிப்பை பக்தர்கள் வரவேற்றுள்ளனர்.

சென்னை,

கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் கோவில்களில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது.

கோவில்களை திறக்க கோரிக்கை

வரிசையாக பண்டிகைகள் வருவதால் கோவில்களை அனைத்து நாட்களும் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் நல்ல அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இதற்கிடையே நேற்று முன்தினம் கூடுதல் தளர்வுகளை மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதில் அனைத்து நாட்களிலும் கோவில்கள் திறக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆலோசனை கூட்டம்

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 5-10-2021-ன்படி 31-10-2021 காலை 6 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.

எதிர்வரும் பண்டிகை காலங்களில் கொரோனா நோய்த்தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அண்டை மாநிலங்களில் நோய்த்தொற்று நிலையினை கருத்தில் கொண்டும் தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 13-ந் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அனைத்து நாட்களும் கோவில்கள் திறப்பு

பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக கடைகளுக்கு செல்வதை கருத்தில் கொண்டு 15-ந் தேதி (நேற்று) முதல் ஏற்கனவே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து வகைக்கடைகள், உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் இரவு 11 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

மேலும், கோவில்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதேபோன்று, அனைத்து தனிப்பயிற்சி நிலையங்கள், அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் ஆகியவையும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

மேலும் பின்வரும் செயல்பாடுகளுக்கு நவம்பர் 1-ந் தேதி முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

கடற்கரைக்கு செல்ல அனுமதி

மாவட்ட நிர்வாகத்தால் நடந்தப்படும் மாதாந்திர மக்கள் தொடர்பு முகாம்கள் நடந்தலாம். தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகள் உரிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படலாம்.

மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிகள் முழுமையாக செயல்படலாம். காப்பாளர், சமையலர்உள்பட அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி. திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 நபர்கள் பங்குபெற அனுமதி.

இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேர் சுலந்து கொள்வதற்கு அனுமதி ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும். திருவிழாக் கள், அரசியல், சமுதாய மற்றும் கலாசாரநிகழ்வுகளுக்குநடைமுறையிலுள்ள தடை தொடரும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்கள் திறப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவையடுத்து வழிபாட்டுத்தலங்களுக்கான தடை நீங்கியதையடுத்து வெள்ளிக்கிழமையான நேற்று மாநிலம் முழுவதும் உள்ள கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என அனைத்து வழிபாட்டுத்தலங்களும் திறக்கப்பட்டன. அரசின் இந்த அறிவிப்பை பக்தர்கள் வரவேற்றுள்ளனர்.

இதனையடுத்து சென்னையில் உள்ள புகழ்பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, வடபழனி முருகன் கோவில்கள், தியாகராய நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவில், பாரிமுனை கந்தக்கோட்டம் முருகன் கோவில், காளிகாம்பாள் கோவில், திருவேற்காடு மாரியம்மன் கோவில், பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், மயிலாப்பூர் சாய்பாபா கோவில் உள்பட கோவில்களுக்கு அதிகாலை முதலே பக்தர்கள் வருகை தந்தனர். விஜயதசமி தினமான நேற்று வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.

தேவாலயங்கள், மசூதிகள்

இதேபோல் சென்னை சாந்தோம், பெசன்ட் நகர் புனித வேளாங்கண்ணி தேவாலயங்கள், சைதாப்பேட்டை சின்னமலை ஆரோக்கிய அன்னை திருத்தலம், மயிலாப்பூர் லஸ் தேவாலயம், பிராட்வே அந்தோணியார் தேவாலயம், எழும்பூர் திரு இருதய ஆண்டவர் தேவாலயம் உள்பட அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் வெள்ளிக்கிழமையான நேற்று காலை மற்றும் மாலை திருப்பலி நடைபெற்றது.

இதில் கிறிஸ்தவர்கள் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இதேபோன்று சென்னை அண்ணாசாலை, திருவல்லிக்கேணி, பெரியமேடு உள்ளிட்ட இடங்களில் உள்ள மசூதிகளில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். கொரோனா வழிகாட்டு நடைமுறைகளை கடைபிடித்தனர்.

இனி அனைத்து நாட்களும் தடையின்றி வழிபாட்டுத்தலங்களுக்கு செல்லலாம் என்பதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வழிபாட்டுத்தலங்களுக்கு வெளியே கடை வைத்திருக்கும் வியாபாரிகளும் நிம்மதி அடைந்துள்ளனர்.

கடைகள் திறப்பு

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடைகள், பேக்கரிகள், ஓட்டல்கள் அனைத்தும் இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டன.

தமிழக அரசு கூடுதல் தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று முதல் ஜவுளி, மளிகை கடைகளும், ஓட்டல்களும் இரவு 11 மணி வரை இயங்கின. தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கும் நிலையில் வாடிக்கையாளர்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.

இதனால் மக்கள் அதிகம் கூடும் தி.நகர் ரங்கநாதன் தெரு, புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் வாடிக்கையாளர்கள் வருகை அதிகமாக காணப்பட்டது.

Next Story