சசிகலாவின் நடிப்புக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம்: ஜெயக்குமார் விமர்சனம்


சசிகலாவின் நடிப்புக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம்: ஜெயக்குமார் விமர்சனம்
x
தினத்தந்தி 16 Oct 2021 7:43 AM GMT (Updated: 16 Oct 2021 7:43 AM GMT)

சசிகலாவுக்குக் கொடுக்கப்படும் 'பில்டப்' செயற்கையானதாக இருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார்.

சென்னை,

சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையான பிறகு சசிகலா முதல் முறையாக இன்று ஜெயலலிதா நினைவிடத்திற்கு நேரில் வந்து மரியாதை செலுத்தினார். கண்ணீர் மல்க மரியாதை செலுத்திய சசிகலா, இத்தனை ஆண்டுகள் மனதில் தேக்கி வைத்திருந்த  பாரத்தை இறக்கி வைத்திருப்பதாக செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில் கூறினார். 

இந்த நிலையில், சசிகலாவை கடுமையாக விமர்சித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவின் நடிப்புக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம் என்று சாடியுள்ளார். ஜெயக்குமார் மேலும் கூறியதாவது;-

"சசிகலாவுக்குக் கொடுக்கப்படும் 'பில்டப்' செயற்கையானதாக இருக்கிறது. இயற்கையாக இல்லை. ஒரு நாளுக்கு லட்சக்கணக்கானோர் ஜெயலலிதா நினைவிடம் செல்கின்றனர். அந்த லட்சக்கணக்கானோரில் இவரையும் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான். அதில் பெரிய விசேஷம் கிடையாது. 

இது பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தாது. அவர் நினைப்பது நடக்கப்போவதில்லை.அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை. அதிமுகவைக் கைப்பற்ற நினைப்பது பகல் கனவு. சசிகலாவின் நடிப்புக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம். அதிமுகவில் அவருக்கு இடம் கிடையாது” என்றார். 

Next Story