மனைவி இறந்த விரக்தியில் மகளை கொன்று விட்டு தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை


மனைவி இறந்த விரக்தியில் மகளை கொன்று விட்டு தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
x
தினத்தந்தி 16 Oct 2021 6:34 PM GMT (Updated: 16 Oct 2021 8:27 PM GMT)

மனைவி இறந்த விரக்தியில் மகளை கொன்று விட்டு தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை,

சென்னை ஓட்டேரி பிரிக்லின் சாலையை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 53). தனியார் போக்குவரத்து நிறுவன ஊழியர். இவரது மனைவி சுதா. சுதா 3 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இறந்து விட்டார். இதனால் ரவிச்சந்திரன் தனது 9 வயது மகள் தீக்‌ஷிதாவுடன் ஓட்டேரியில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார்.

மனைவி இறந்ததால் தாய் இல்லாத மகளின் நிலையை கண்டு மனமுடைந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி தனது மகள் தீக்‌ஷிதாவுடன் மாமல்லபுரம் வந்த அவர் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து 4 நாட்கள் தங்கி இருந்தார்.

நேற்று அறையை காலி செய்வதாக அவர் கூறிய நிலையில் வெகு நேரமாகியும் அறை கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் சென்ற போலீசார் விடுதி அறைக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரவிச்சந்திரன் தூக்கில் தொங்கிய நிலையிலும், தீக்‌ஷிதா மூக்கில் நுரை தள்ளிய நிலையிலும் கட்டிலில் இறந்து கிடந்தனர்.

மாமல்லபுரம் போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதில், ரவிச்சந்திரன் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி அறையில் வைத்திருந்தார். அதில் ‘தங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை எனவும், நாங்களே இந்த முடிவை எடுத்து கொண்டோம்‘ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ரவிச்சந்திரனின் செல்போனை போலீசார் சோதனை செய்தனர். அவர் இறப்பதற்கு முன் சென்னையில் உள்ள அவரது உறவினர் நிவாஸ் என்பவருக்கு நானும், என்னுடைய மகளும் இன்று இந்த உலகை விட்டு செல்வதாகவும், நானும் என் மகளும் இந்த முடிவை எடுத்துவிட்டதாகவும் வாட்ஸ்-அப் மூலம் தகவல் அனுப்பியுள்ளார்.

மனைவி இறந்த விரக்தியில் இருந்த ரவிச்சந்திரன் மகளுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொன்றுவிட்டு, பின்னர் அவர் விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story