தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x
தினத்தந்தி 16 Oct 2021 8:44 PM GMT (Updated: 2021-10-17T02:14:14+05:30)

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்துகொண்டே வருவதால் யாரும் அச்சப்பட தேவை இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சைதாப்பேட்டை மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.20 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

‘நீட்' தேர்வை ரத்து செய்யக்கோரிய மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்திருந்தால் இந்நேரம் கொண்டாடியிருப்போம். எம்.பி.க்கள் டி.கே.எஸ். இளங்கோவன், திருச்சி சிவா ஆகியோர் ‘நீட்' தேர்வின் பாதிப்பு குறித்த நீதிபதி ஏகே.ராஜன் கமிட்டியின் அறிக்கையை 7 மொழிகளில் பெயர்த்து, 12 மாநில முதல்-மந்திரிகளை நேரில் சந்திக்கும்போது கொடுத்து வருகிறார்கள்.

இதற்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூட அவருடைய ஒடிசா மாநிலத்தில் ‘நீட்' தேர்வில் இருந்து விலக்கு பெறவேண்டும் என்ற எண்ணம் இருப்பதாக கூறினார். இந்தியாவின் எல்லா மாநில முதல்-மந்திரிகளுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும் ‘நீட்' தேர்வில் இருந்து விலக்கு பெறவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியுள்ளது.

கொரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு எந்த மாநிலத்திலும் ரூ.3 லட்சம் வழங்கப்படவில்லை. எந்த மாநிலமும் அப்படி வழங்கவும் முடியாது. சுப்ரீம் கோர்ட்டு ரூ.50 ஆயிரம் கொடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளது. இன்னும் எந்த மாநிலமும் நிதி கொடுக்க தொடங்கவில்லை. மத்திய அரசின் வழிகாட்டுதல் வந்தவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுப்பார். மத்திய அரசின் நிதியும் தேவைப்படுகிறது. 20 நாட்களுக்கும் மேலாக கொரோனா தாக்கம் தமிழகத்தில் குறைந்துகொண்டே வருகிறது. எனவே அச்சப்பட தேவை இல்லை.

அதே நேரத்தில் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். பள்ளிகளில் கொரோனா தடுப்பு நெறிமுறைகளையும் ஏற்கனவே கொடுக்கப்பட்ட வழிகாட்டுதல்களையும் சரியாக பின்பற்ற வேண்டும். 2015-ல் முன்னறிவிப்பின்றி ஒரே இரவில் 1 லட்சம் கன அடி நீரை செம்பரம்பாக்கத்தில் திறந்ததால்தான் சைதாப்பேட்டை பாதிக்கப்பட்டது. அப்போதைய முதல்-அமைச்சரை அதிகாரிகள் சந்திக்க முடியாததால் ஏற்பட்ட அசம்பாவிதம். நாடாளுமன்றத்திலேயே இது ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம். சாதாரண நபர் தொடங்கி அதிகாரிகள் வரை தற்போதைய முதல்-அமைச்சரை தினமும் சந்தித்து வருகிறார்கள். எனவே மீண்டும் அது போன்ற நிலை சென்னைக்கு ஏற்படாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story