மெட்ரோ ரெயில் பணி; சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்!


மெட்ரோ ரெயில் பணி; சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்!
x
தினத்தந்தி 17 Oct 2021 9:26 AM GMT (Updated: 17 Oct 2021 9:26 AM GMT)

மெட்ரோ ரெயில் பணிக்காக சென்னையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

சென்னை,

இது தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் அயனாவரம் ஆர்டிஓ அலுவலகம் முதல் ஆண்டர்சன் தெரு வரை மெட்ரோ ரயில் நிலையம் கட்டுமான பணி தொடங்குகிறது. இதனால், அக்டோபர் 19ஆம் தேதி முதல் ஆண்டர்சன் சாலை ஒரு வழி பாதையாக மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே அன்று முதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

* ஆண்டர்சன் சாலையில்ஆர்.டி.ஓ அலுவலகம் சந்திப்பு முதல் கான்ஸ்டிபன் சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றப்படுகிறது.

* பில்கிங்டன் சாலையில் கொன்னூர் நெடுஞ்சாலை முதல் கான்ஸ்டிபன் சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றப்படுகிறது.

* ஆண்டரசன் சாலையில் அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து வழக்கம் போல் பெரம்பூர் நோக்கி செல்லலாம்.

* ஆண்டர்சன் சாலையில் கான்ஸ்டிபன் சாலை சந்திப்பிலிருந்து அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்ல இயலாது.

* மோட்டர் சைக்கிள்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் கான்ஸ்டிபன் சாலை மற்றும் பில்கிங்கடன் சாலை சந்திப்பிலிருந்து பில்கிங்டன சாலை வழியாக கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்லலாம்.

* கனரக வாகனங்கள், கான்ஸ்டிபன் சாலை மற்றும் பில்கிங்டன் சாலை சந்திப்பில் வலது புறம் திரும்பி கான்ஸ்டிபன் சாலை (ரயில்வே மருத்துவமனை) போர்சுகீஸ் சாலை வழியாக கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்லலாம்.

* கொன்னூர் நெடுஞ்சாலையிலிருந்து பில்கிங்டன் சாலை வழியாக பெரம்பூர் நோக்கி செல்ல அனுமதியில்லை. அவ்வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள் கொன்னூர் நெடுஞ்சாலையில் நேராக சென்று இடது புறமாக திரும்பி ஆண்டர்சன் சாலை மற்றும் கான்ஸ்டிபன் சாலை வழியாக செல்லலாம்.

மேலும் வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story